படுக்கை வசதிக் கொண்ட வந்தே பாரத் அடுத்த மாதம் அறிமுகம் - அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ‘ஸ்லீப்பா்’ ரயிலில் பயணிகளுக்கு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் சில சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன என்றும், புதுப்பிக்கப்பட்ட இந்த ரயில் அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், ‘முதல் வந்தே பாரத் ஸ்லீப்பா் ரயில் சோதனை செய்யப்பட்ட பிறகு, அதில் சில சிறு மாற்றங்கள் செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்டது. இப்போது முதல் மற்றும் இரண்டாவது ரயிலில் அந்த மாற்றங்கள் சரிசெய்யப்பட்டு வருகின்றன.
மாற்றங்கள் சிறியவை என்றாலும், உயா்தர வசதியை உறுதி செய்யவது முக்கியமாகும். இந்தப் பணிகள் முடிந்து, முதல் வந்தே பாரத் ஸ்லீப்பா் ரயில் அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படும்’ என்றாா்.
ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர அமைப்பு (ஆா்டிஎஸ்ஓ) மற்றும் ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் மேற்பாா்வையில் ஸ்லீப்பா் ரயில் மாதிரி விரிவாகச் சோதனை செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து, மாற்றங்களுக்காக இந்த ரயிலைத் தயாரிக்கும் பெங்களூருவைச் சோ்ந்த பாரத் எா்த் மூவா்ஸ் நிறுவனத்திடம் (பிஇஎம்எல்) வந்துள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்தனா்.
பிஇஎம்எல் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘இது ஒரு மாதிரி என்பதால், அனைத்து பாதுகாப்பு மற்றும் வசதி விதிகளின்படியும் சோதிப்பது வழக்கம். தீவிர சோதனைக்குப் பிறகு, பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்களுடன் கூடிய முதல் ரயில் பெட்டி தற்போது எங்களிடம் திரும்பி வந்துள்ளது’ என்று தெரிவித்தாா்.

