

முஸ்லிம்களின் தலாக்-ஏ-ஹசன் விவாகரத்து முறைக்கு எதிரான வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.
உடனடி முத்தலாக் முறை அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கடந்த 2017-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
முத்தலாக்கைப் போலவே தலாக்-ஏ-ஹசன் என்ற மற்றொரு விவாகரத்து முறை பின்பற்றப்படுகிறது. இந்த முறையின் கீழ், மாதத்துக்கு ஒருமுறை என மூன்று மாதங்களில் மூன்று முறை தலாக் கூறி, அந்த மதத்தைச் சேர்ந்த ஆண்கள் தங்கள் மனைவிகளை விவாகரத்து செய்ய முடியும்.
இந்த முறையால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்கள், தலாக்-ஏ-ஹசன் முறைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுக்களில் பேநசிர் ஹீணா என்ற பெண் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், உஜ்ஜல் புயான், கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு புதன்கிழமை விசாரித்தது.
அப்போது ஹீணாவின் முன்னாள் கணவர் சார்பாக மூத்த வழக்குரைஞர் எம்.ஆர்.ஷம்ஷத் ஆஜராகி, "தலாக்-ஏ-ஹசன் முறையின் கீழ், கணவர் சார்பாக அவரின் மனைவிக்கு யார் வேண்டுமானாலும் விவாகரத்து நோட்டீஸ் வழங்கலாம். அதற்கான அனுமதியை கணவரால் வழங்க முடியும்' என்றார்.
நாகரிக சமுதாயத்தில் அனுமதிக்கலாமா?: இதைக் கேட்ட நீதிபதிகள் அமர்வு, "என்ன மாதிரியான வழக்கம் இது?
இதுபோன்ற ஒரு வழக்கத்தை நாகரிகமடைந்த நவீன சமுதாயம் அனுமதிக்கலாமா? பேநசிர் ஹீணா ஊடகவியலாளராக உள்ளார். அவரால் உச்சநீதிமன்றத்தை அணுக முடிந்துள்ளது ஆனால் அவரைப் போல பாதிக்கப்பட்ட ஏழ்மையான பெண்கள் ஏராளமானோர் இருக்கக் கூடும். இதுகுறித்து அவர்கள் வாய்திறந்து பேசமுடியாமல் வேதனையை அனுபவித்து வரக் கூடும்.
மத வழக்கத்தை ரத்து செய்வதற்கான கேள்வியல்ல: தலாக்-ஏ-ஹசன் முறை சமுதாயத்தை அதிக அளவு பாதிக்கிறது. இதற்கு தீர்வு காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இஸ்லாத்தில் எத்தனை வகையான தலாக் முறைகள் உள்ளன என்ற விவரத்தை தாக்கல் செய்ய வேண்டும். இது ஒரு மத வழக்கத்தை ரத்து செய்வது குறித்த கேள்வியல்ல. ஆனால் அரசமைப்புச் சட்ட பொதுப்பண்புக்கு ஏற்ப முறைப்படுத்த வேண்டிய விவகாரமாகும்.
எனவே தலாக் வகைகள் குறித்த சுருக்கமான விவரத்தை சமர்ப்பித்தால், தலாக்-ஏ-ஹசன் முறைக்கு எதிரான விவகாரத்தை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைப்பது குறித்து பரிசீலிப்போம்' என்று தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.