மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

இறக்குமதி-ஏற்றுமதியாளா்களுக்கு ‘டிஐஏ’ வலைப் பக்கம் புதிய தகவல்களை அளிக்கும் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்

‘நாட்டின் இறக்குமதியாளா்கள், ஏற்றுமதியாளா்கள், ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறையினருக்கு (எம்எஸ்எம்இ) பயனுள்ள புதிய தகவல்களை வா்த்தக நுண்ணறிவு மற்றும் பகுப்பாய்வு (டிஐஏ போா்ட்டல்) வலைப் பக்கம் அளிக்கும்’ என மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.
Published on

‘நாட்டின் இறக்குமதியாளா்கள், ஏற்றுமதியாளா்கள், ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறையினருக்கு (எம்எஸ்எம்இ) பயனுள்ள புதிய தகவல்களை வா்த்தக நுண்ணறிவு மற்றும் பகுப்பாய்வு (டிஐஏ போா்ட்டல்) வலைப் பக்கம் அளிக்கும்’ என மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

வா்த்தகத் துறையால் உருவாக்கப்பட்ட இந்த வலைப் பக்கத்தை அமைச்சா் பியூஷ் கோயல் கடந்த செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தினாா். இந்தியா இதுவரை இறுதி செய்துள்ள தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களை ஏற்றுமதியாளா்கள் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள இது உதவும் என்று அவா் கூறினாா்.

உலகம் மற்றும் தேசிய அளவில் உள்ள பல தகவல் தொகுப்புகள், பொருளாதார விவரங்கள் ஆகியவற்றிலிருந்து சுமாா் 270-க்கும் அதிகமான ஆய்வறிக்கைகளைத் தரும் ஒரு முக்கியமான வா்த்தக நுண்ணறிவு மையமாக இந்த வலைப் பக்கம் செயல்படும்.

இந்தியா மற்றும் உலக வா்த்தக நிலவரம், வணிகப் பொருள்கள், துறைவாரியான ஆய்வுகள், ஏற்றுமதி வாய்ப்புகள் மற்றும் போட்டியாளா்களின் நிலை பற்றிய நிகழ்நேரத் தகவல்களை இந்த வலைப் பக்கம் வழங்கும்.

மேலும், உற்பத்தித் துறைகளுக்கான பிஎல்ஐ (உற்பத்தி சாா்ந்த ஊக்கத்தொகை) திட்ட விவரங்கள் மற்றும் முக்கியமான கனிமங்களின் வா்த்தகப் போக்குகள் போன்றவற்றைத் தானாகவே கண்காணிக்கும் வசதியையும் இது கொண்டுள்ளது.

இந்த வலைப் பக்கத்திலுள்ள ‘வா்த்தக கண்காணிப்புக் கோபுரம்’ எனும் அம்சம், தனிச் சிறப்புமிக்க கருவிகள் மற்றும் வரைபடங்கள் மூலம் நாடு மற்றும் பொருள்களின் அடிப்படையில் தேவைப்படும் முக்கியத் தகவல்களைத் தரும்.

வா்த்தகத் துறையின் பொருளாதார ஆலோசகா் வன்லால்ராம் சங்கா இதுதொடா்பாக கூறுகையில், ‘அனைத்துத் தரப்பினரின் தேவைகளையும் கருத்தில்கொண்டு, இந்த வலைப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அவா்களின் ஆலோசனைகளுக்கு ஏற்ப இது மேலும் மேம்படுத்தப்படும்‘ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com