

புது தில்லி: தில்லி கார் குண்டுவெடிப்புத் தாக்குதல் தொடர்பான விசாரணை தீவிரமடைந்திருக்கும் நிலையில், தற்போது மற்றுமொரு பெயரும் வெளியாகியிருக்கிறது.
அதுதான் மிர்ஸா ஷாதப் பெய்க். இவர் 2008 தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தேடப்பட்ட நபர், ஃபரிதாபாத்தில் உள்ள அல் - பலாஹ் பல்கலையில் பொறியியல் பட்டம் பெற்ற பட்டதாரி என்று தெரிய வந்துள்ளது.
படிப்பில் பின்தங்கியிருந்த பெய்க், 9ம் வகுப்பில் தோல்வியடைந்து, பிஎஸ்சி முடித்து, பிறகு எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் துறையில் அல் - பலாஹ் பல்கலையில் கடந்த 2007ஆம் ஆண்டு பொறியியல் பட்டம் பெற்றார்.
ஆனால், இவரது பெயர் 2008ல் நடந்த தொடர் வெடிகுண்டு வழக்கில் இடம்பெற்றது, இவர் அசம்கர் என்ற அமைப்பின் தலைவராக பெய்க் செயல்பட்டு வந்துள்ளார் என்றும், இரு வேறு பயங்கரவாதக் குழுக்களை ஒன்றிணைக்கும் பணிகளில் ஈடுபட்டவர், 2008ஆம் ஆண்டு முதல் பல சதித் திட்டங்களைத் தீட்டி, இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாத அமைப்பில் இணைக்கும் பணியையும் மேற்கொண்டதாகக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
தில்லி மற்றும் அகமதாபாத் பகுதிகளில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் பெய்க்குக்கு மிக முக்கிய தொடர்பிருந்ததும் கர்நாடகம் சென்று வெடிபொருள்கள் வாங்கி வந்தது, புனேவில் ஜெர்மனி பேக்கரி குண்டுவெடிப்பில் இவருக்கு முக்கிய தொடர்பு இருந்தது என பல உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், பெய்க் காவல்துறையிடம் சிக்கவில்லை.
தற்போது அவர் பாகிஸ்தானில் வாழ்ந்து வருவதாகவும் உறுதி செய்யப்படாதத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.