

தேர்தலில் போட்டியிடாமலேயே ராஷ்டிரிய லோக் மோர்ச்சா கட்சித் தலைவரின் மகன் பிகார் அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக - ஐக்கிய ஜனதா தளக் கூட்டணி மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 202-ல் வென்று தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்தது.
இதைத் தொடர்ந்து தனது முந்தைய ஆட்சியின் முதல்வர் பதவியை நிதீஷ் குமார் ராஜிநாமா செய்த நிலையில், பிகார் மாநிலத்தின் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவராக நிதீஷ் குமார் நேற்று(நவ.19) தேர்வு செய்யப்பட்டார்.
தொடர்ந்து பிகார் மாநிலம் பாட்னாவில் உள்ள காந்தி அரங்கில் இன்று (நவ.20) நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிகார் முதல்வராக நிதீஷ் குமார் பதவியேற்றார். ஆளுநர் ஆரிஃப் முகமது கான் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து 10 ஆவது முறையாக நிதீஷ் குமார் பொறுப்பேற்றார்.
அவரைத் தொடர்ந்து ஜேடியு, பாஜக மற்றும் கூட்டணிக் கட்சியில் உள்ள 26 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
பாஜக 14 இடங்களையும், ஜேடியு 8 இடங்களையும், லோக் ஜனசக்தி கட்சி (ஆர்வி) 2 இடங்களையும், ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா (எஸ்) மற்றும் ராஷ்டிரிய லோக் மோர்ச்சாவுக்கு தலா ஒரு அமைச்சர் பதவியும் ஒதுக்கப்பட்டன.
இந்த நிலையில், யாரும் எதிர்பார்த்திடாத வகையில் தேர்தலிலேயே போட்டியிடாத தீபக் பிரகாஷ் என்பவரும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ராஷ்டிரிய லோக் மோர்ச்சா கட்சித் தலைவர் உபேந்திர குஷ்வாஹா மகன் தீபக் பிரகாஷ் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஷ்டிரிய லோக் மோர்ச்சா கட்சித் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான உபேந்திர குஷ்வாஹா தற்போது மாநிலங்களவை எம்பியாகவும் உள்ளார். இவரது மனைவி ஸ்னேஹ லதா, சசாராம் தொகுதியில் போட்டியிட்டு தேர்தலில் வெற்றிபெற்று எம்எல்ஏவாகவுள்ளார்.
தீபக் பிரகாஷ், வெளிநாட்டில் படித்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவர் சமீபத்தில் பிகார் தேர்தலுக்கு முன்னதாக இந்தியா வந்துள்ளார். இதனால், அவர் குறித்த மற்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
ஒருவர் தேர்தலில் போட்டியிடாமல் அமைச்சராகப் பதவியேற்கும் சூழல் ஏற்படும் பட்சத்தில் அடுத்த 6 மாதங்களுக்குள் அவர் எம்எல்ஏ அல்லது எம்எல்சி ஆக தேர்வாக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், தீபக் பிரகாஷ், எம்.எல்.சி ஆக தேர்வு செய்யப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
குறிப்பிடத்தக்க விஷயமாக உபேந்திர குஷ்வாஹா, பிகாரில் கணிசமாக வாழும் குர்மி சமூகத்தைச் சேர்ந்தவர். மேலும், முதல்வர் நிதீஷ்குமார் இதே சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் அமைச்சர் பதவிக்கு தீபக்கின் பெயர் முதன்மை படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.