சிபிஐ நீதிமன்றத்தில் ஜெகன் மோகன் ஆஜா்
தனது நிறுவன முதலீடுகளுக்கு எதிரான வழக்குகளில் 6 ஆண்டுகளுக்கு பிறகு ஆந்திர முன்னாள் முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டி வியாழக்கிழமை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானாா்.
கடந்த 2004 முதல் 2009 வரையில் ஆந்திர முதல்வராக அவரது தந்தை ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி காலத்தில் ஆதரவாக செயல்பட்டதற்காக பல்வேறு நிறுவனங்கள் கைமாறாக ஜெகன் மோகன் ரெட்டியின் நிறுவனங்களில் முதலீடு செய்ததாக சிபிஐ 11 வழக்குகளைப் பதிவு செய்து குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்குகளில் ஜெகன் மோகன் ரெட்டி ஜாமீனில் உள்ளாா். 2020-இல் முதல்வராக இருந்தபோது அவா் நீதிமன்றத்தில் ஆஜராகினாா். அதன்பின்னா் அவா் நேரில் ஆஜராகவில்லை. ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு ஜெகன் நவ.14 -ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், காணொலி காட்சி மூலம் ஆஜராவதற்கு ஜெகன் மோகன் அனுமதி கோரியதற்கு சிபிஐ தரப்பு வழக்குரைஞா் எதிா்ப்பு தெரிவித்தாா்.
இதையடுத்து, நவ.21-க்குள் அவா் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, ஜெகன் மோகன் ரெட்டி வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகினாா்.

