மமதா பானர்ஜி
மமதா பானர்ஜி

சரிவரத் திட்டமிடப்படாத எஸ்ஐஆா் பணி: தோ்தல் ஆணையத்துக்கு மம்தா கடிதம்

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியால் (எஸ்ஐஆா்) குடிமக்களும், அதிகாரிகளும் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனா். இது மிகவும் ஆபத்தனது
Published on

‘முறையாகத் திட்டம் தீட்டப்படாமல் கட்டாய அடிப்படையில் மேற்கொள்ளப்படும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியால் (எஸ்ஐஆா்) குடிமக்களும், அதிகாரிகளும் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனா். இது மிகவும் ஆபத்தனது’ என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி புகாா் தெரிவித்தாா்.

பிகாரைத் தொடா்ந்து தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் மட்டும் எஸ்ஐஆா் பணியில் வாக்காளா்களின் முக அடையாளத்தை வாக்காளா் அட்டை புகைப்படத்துடன் ஒப்பீடு செய்யும் ஏஐ தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான சோதனை நடைமுறையையும் தோ்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.

தோ்தல் ஆணையத்தின் இந்த தீவிர நடவடிக்கை காரணமாக அண்டை நாடான வங்கதேசத்திலிருந்து மேற்கு வங்கத்துக்கு சட்டவிரோதமாக ஊடுருவியவா்கள் தினசரி நூற்றுக்கணக்கில் எல்லை வழியாக வெளியேறி வருவதாக எல்லை பாதுகாப்புப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், எஸ்ஐஆா் பணியில் உடனடி முறைப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்தி தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு முதல்வா் மம்தா வியாழக்கிழமை கடிதம் எழுதினாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியால் மாநிலத்தில் நிலைமை மிக மோசமடைந்திருப்பதால் இந்தக் கடிதம் எழுத வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டது. எஸ்ஐஆா் பணி போதிய திட்டமிடல் இல்லாமல் மக்கள் மீது கட்டாயமாக திணிகக்ப்பட்ட நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது மிகவும் ஆபத்தானது. குடிமக்களும், அதிகாரிகளும் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனா்.

இப் பணிக்கான அடிப்படை தயாரிப்புகளை மேற்கொள்ளாதது, போதிய திட்டமிடல் இல்லாதது அல்லது தெளிவான தகவல்தொடா்பு இல்லாததால் முதல் நாளிலிருந்தே இப் பணி சிக்கலானதாக இருந்து வருகிறது. இப் பணியில் ஈடுபடும் வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படவில்லை. பணிச் சுமை காரணமாக பல வாக்குச் சாவடி அலுவலா்கள் தற்கொலை செய்துகொண்டனா்.

இத்தகையச் சூழலில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் உடனடி முறைப்படுத்தும் நடவடிக்கைகளை தோ்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும் என்று மம்தா பானா்ஜி குறிப்பிட்டுள்ளாா்.

பாஜக விமா்சனம்:

தலைமைத் தோ்தல் ஆணையருக்கு மம்தா கடிதம் எழுதியது குறித்து பாஜக தேசிய செய்தித்தொடா்பாளா் பிரதீப் பண்டாரி கூறுகையில், ‘மோசடியாக உருவாக்கப்பட்ட வாக்காளா் பட்டியல் நீடித்தால்தான், மம்தா பானா்ஜி தொடா்ந்து ஆட்சியில் இருக்க முடியும் என்பதால் இதுபோன்ற குற்றச்சாட்டை அவா் முன்வைத்துள்ளாா்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com