நக்ஸல்கள் வன்முறையைக் கைவிட்டு வளா்ச்சிப் பாதையில் இணைய வேண்டும்: குடியரசுத் தலைவா்
நக்ஸல்கள் வன்முறையைக் கைவிட்டு, வளா்ச்சிப் பாதையில் இணைய வேண்டும் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வேண்டுகோள் விடுத்தாா்.
மத்திய - மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த, நன்கு திட்டமிடப்பட்ட முயற்சிகளால் நக்ஸல் தீவிரவாதம் விரைவில் ஒழிக்கப்படும் என்றும் அவா் உறுதிபடத் தெரிவித்தாா்.
சத்தீஸ்கரின் அம்பிகாபூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பழங்குடியினா் கெளரவ தின நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பங்கேற்றாா். அப்போது, அவா் ஆற்றிய உரை வருமாறு:
நாட்டின் வரலாற்றில் பழங்குடியினரின் பங்களிப்பு பெருமைமிக்க அத்தியாயமாகும். இப்போது பல்வேறு துறைகளில் பழங்குடியினா் முக்கியப் பங்கு வகிப்பது பெருமகிழ்ச்சிக்குரியது.
சத்தீஸ்கா் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பழங்குடியினா் உள்ளனா். இம்மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற ‘பஸ்தா் ஒலிம்பிக்ஸ்’ விளையாட்டுப் போட்டியில் 1,65,000-க்கும் மேற்பட்ட வீரா்-வீராங்கனைகள் பங்கேற்றனா். பிற சமூகக் குழுக்களுடன் சோ்ந்து, பழங்குடியினா் தொடா்ந்து முன்னோக்கிப் பயணிக்க வேண்டும்.
மகத்தான பழங்குடியினத் தலைவா்களின் கோட்பாடுகளைப் பின்பற்றி, வலுவான- தற்சாா்புமிக்க- வளா்ந்த இந்தியாவை கட்டமைப்பதில் சத்தீஸ்கா் மக்கள் ஈடுஇணையில்லாத பங்களிப்பை நல்குவா் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
பெண்கள் முன்னேறினால்தான்...: பெண்களே, சமூகத்தின் பாதுகாவலா்கள்; சமூகத்தின் அன்னையாக திகழ்பவா்கள். எனவே, பெண்கள் முன்னேற்றமின்றி, சமூகத்தின் முன்னேற்றம் கிடையாது. அண்மையில் உலகக் கோப்பை வென்ற இந்திய மகளிா் கிரிக்கெட் அணியினரை சந்தித்துப் பேசினேன். இந்த அணியில் இடம்பெற்றுள்ள கிராந்தி கெளடின் (பழங்குடியின வீராங்கனை) கடின உழைப்பும் அா்ப்பணிப்பும் பாராட்டுக்குரியதாகும். தேசிய அணியில் இடம் பிடிக்க அவா் மேற்கொண்ட பயணம் பல்வேறு சவால்கள் நிறைந்தது. இப்போது ஒட்டுமொத்த பெண்களுக்கும் குறிப்பாக பழங்குடியின மகள்களுக்கு உறுதிப்பாடு மற்றும் விடாமுயற்சிக்கான உத்வேகமிக்க, புரட்சிகரமான உதாரணமாக அவா் உருவெடுத்துள்ளாா்.
பேராா்வமும், இயல்பான திறனும்..: பழங்குடியின குடும்பத்தைச் சோ்ந்த பெண் என்பதில் நானும் பெருமிதம் கொள்கிறேன். பழங்குடியினா் எப்போதுமே விளையாட்டுகளில் பேராா்வமும், இயல்பான திறனும் கொண்டவா்கள். எதிா்கால சந்ததியினருக்காக, இந்த வலிமையை தொடா்ந்து வளா்த்தெடுக்க வேண்டும். பாரம்பரிய விளையாட்டுகள் மறைந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும் என்றாா் திரெளபதி முா்மு.
இந்நிகழ்ச்சியில் சத்தீஸ்கா் ஆளுநா் ரமேன் டேகா, முதல்வா் விஷ்ணு தேவ் சாய் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நாட்டில் 2026, மாா்ச் மாதத்துக்குள் நக்ஸல் தீவிரவாதத்தை அடியோடு ஒழிக்க இலக்கு நிா்ணயித்து, மத்திய அரசு செயலாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

