

தில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 மருத்துவர்கள் உள்பட 4 பேரை என்ஐஏ கைது செய்து விசாரணைக் காவலில் வைத்துள்ளது.
தில்லி செங்கோட்டை அருகேவுள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையத்தின் முதலாம் வாயில் அருகே கடந்த 10 ஆம் தேதி மாலை 6.50 மணியளவில் கடும் நெரிசலுக்கு மத்தியில் கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் அருகில் இருந்த வாகனங்களும் தீக்கிரையாகின. இச்சம்பவத்தில் 13 பேர் பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தில்லி, உத்தரப் பிரதேசம், ஹரியாணா காவல் துறை உதவியுடன் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது.
தில்லி கார் வெடிப்பு சம்பவத்தை, பயங்கரவாத தாக்குதல் என மத்திய அரசு அறிவித்தது. காரை ஓட்டிச் சென்ற உமர் இந்த தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டுள்ளார்.
இந்நிலையில் தில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 4 பேரை தேசிய புலனாய்வு முகமை இன்று கைது செய்துள்ளது.
பாட்டியாலா நீதிமன்றத்தின் மாவட்ட அமர்வு நீதிபதி உத்தரவின் பேரில் ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள தேசிய புலனாய்வுத் துறையால் 4 பேரும் விசாரணைக்காக காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.
புல்வாமாவைச் சேர்ந்த டாக்டர் முஸாமில் ஷகீல், அனந்த்நாக் பகுதியைச் சேர்ந்த டாக்டர் அதீல் அகமது ராதர், லக்னெளவைச் சேர்ந்த டாக்டர் ஷாஹீன் சயீத், ஷோபியான் பகுதியைச் சேர்ந்த முஃப்தி இர்பான் அகமது வாகே என 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தில்லி பயங்கரவாத தாக்குதலில் இந்த 4 பேருக்கும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ தகவல் தெரிவித்துள்ளது.
இதில் மருத்துவர்கள் 3 பேரை ஏற்கெனவே ஜம்மு-காஷ்மீர் காவல்துறை கைது செய்து வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவத்தில் வெடித்துச் சிதற பயன்படுத்தப்பட்ட காரின் உரிமையாளர் அமீர் ரஷித் அலி என்பவரையும் இவர்களுக்கு தொழில்நுட்ப உதவி வழங்கிய ஜஸிர் பிலால் என்பவரையும் ஏற்கெனவே என்ஐஏ கைது செய்துள்ளது. இதன் மூலம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.