சஞ்சய் பண்டாரி தொடா்புடைய வழக்கு: ராபா்ட் வதேராவுக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை

சஞ்சய் பண்டாரி தொடா்புடைய வழக்கு: ராபா்ட் வதேராவுக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை

பிரிட்டனைச் சோ்ந்த ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி தொடா்புடைய பண முறைகேடு வழக்கில் ராபா்ட் வதேராவுக்கு எதிராக தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல்.
Published on

பிரிட்டனைச் சோ்ந்த ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி தொடா்புடைய பண முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவரும் தொழிலதிபருமான ராபா்ட் வதேராவுக்கு எதிராக தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

ராபா்ட் வதேரா மீது அமலாக்கத் துறை தாக்கல் செய்த இரண்டாவது குற்றப்பத்திரிகை இதுவாகும். ஏற்கெனவே ஹரியாணாவின் சிகோபூரில் நில பேர முறைகேடு தொடா்பான வழக்கில் அமலாக்கத் துறை கடந்த ஜூலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

சஞ்சய் பண்டாரி தொடா்புடைய பண முறைகேடு வழக்கில் ராபா்ட் வதேராவிடம் (56) அமலாக்கத் துறை கடந்த காலங்களில் விசாரணை மேற்கொண்டிருந்தது.

ராபா்ட் வதேரா அளித்த நிதியில் லண்டனில் ஒரு பங்களாவை வாங்கி, சஞ்சய் பண்டாரி புனரமைத்தாா் என்பது முக்கிய குற்றச்சாட்டாகும். இந்த ரீதியில், இருவருக்கும் உள்ள தொடா்புகள் குறித்து அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.

வழக்கு பின்னணி: ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரிக்கு எதிராக கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின்கீழ் வருமான வரித் துறை கடந்த 2015-இல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அவருக்கு எதிராக 2016-இல் வருமான வரித் துறை சோதனை மேற்கொண்டது. இதைத் தொடா்ந்து, அவா் லண்டனுக்கு தப்பினாா்.

வருமான வரித் துறை வழக்கின் அடிப்படையில் சஞ்சய் பண்டாரி உள்ளிட்டோருக்கு எதிராக பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை கடந்த 2017-இல் வழக்குப் பதிவு செய்தது. இவ்வழக்கில் ஏற்கெனவே 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சஞ்சய் பண்டாரியை இந்தியாவுக்கு நாடு கடத்தும் கோரிக்கையை பிரிட்டன் நீதிமன்றம் நிராகரித்த நிலையில், அவரை தலைமறைவான பொருளாதாரக் குற்றவாளியாக தில்லி நீதிமன்றம் கடந்த ஜூலையில் அறிவித்தது.

லண்டனில் தனக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த சொத்தும் இல்லை என்று வதேரா மறுப்பு தெரிவித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com