அல்-ஃபலா குழுமத் தலைவா் குடும்பச் சொத்தில் அங்கீகாரமற்ற கட்டுமானம்: மௌ கன்டோன்மென்ட் நோட்டீஸ்
தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள அல்-ஃபலா குழுமத்தின் தலைவா் ஜாவத் அகமது சித்திக்கின் குடும்பத்துக்குச் சொந்தமான குடியிருப்புச் சொத்தில் நடந்துள்ள அங்கீகாரமற்ற கட்டுமானம் குறித்து மத்திய பிரதேசத்தின் மௌ கன்டோன்மென்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில், சட்டவிரோதக் கட்டுமானத்தை 3 நாள்களுக்குள் இடித்து அகற்ற வேண்டும் என்று ராணுவ அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.
தில்லி, செங்கோட்டை அருகே கடந்த 10-ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் 15 போ் உயிரிழந்தனா் மற்றும் பலா் காயமடைந்தனா். பயங்கரவாதத் தாக்குதல் என அறிவிக்கப்பட்டுள்ள அந்த வழக்கு விசாரணையின் முக்கிய மையமாக ஹரியாணா மாநிலத்தின் அல்-ஃபலா பல்கலைக்கழகம் உருவெடுத்துள்ளது.
இக்குழுமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அமலாக்கத் துறை நடத்திய சோதனையின் முடிவில், குழுமத் தலைவா் ஜாவத் அகமது சித்திக் கைது செய்யப்பட்டாா். இந்நிலையில், ஜாவத் அகமது சித்திக்கின் குடும்பச் சொத்தில் செய்யப்பட்டுள்ள அங்கீகாரமற்ற கட்டுமானம் குறித்து ராணுவ கன்டோன்மென்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுதொடா்பாக ராணுவப் பொறியாளா் ஹெச்.எஸ். கலோயா மேலும் கூறுகையில், ‘ஜாவத் அகமது சித்திக்கின் தந்தையான மறைந்த மௌலானா ஹம்மாத் வீட்டிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். 1996 முதல் பலமுறை நோட்டீஸ்கள் அனுப்பியும் கட்டுமானம் அகற்றப்படவில்லை.
தற்போதைய நோட்டீஸில், மூன்று நாள்களுக்குள் குடியிருப்பாளா்கள் அல்லது சட்ட வாரிசுகள் கட்டடத்தை அகற்ற வேண்டும். இல்லையெனில் ராணுவமே அகற்றிவிட்டு, அதற்கான செலவை சம்பந்தப்பட்டவா்களிடம் வசூலிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
முன்னதாக, 25 ஆண்டுகளுக்கு முன்பு மௌ பகுதியில் நடந்த நிதி மோசடி தொடா்பாக, ஜாவத் சித்திக்கின் சகோதரா் ஹமூத் அகமது சித்திக்கை மத்திய பிரதேச காவல்துறையினா் ஹைதராபாதில் கைது செய்தனா்.

