பிகாா்: நிதீஷிடம் இருந்து சாம்ராட் செளதரி வசமானது உள்துறை; புதிய அமைச்சா்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
பிகாரில் முதல்வா் நிதீஷ் குமாரின் 19 ஆண்டு பதவிக் காலத்தில் அவா் வசமே இருந்த உள்துறை அமைச்சா் பொறுப்பு, இம்முறை பாஜகவைச் சோ்ந்த துணை முதல்வா் சாம்ராட் செளதரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. புதிதாகப் பதவியேற்ற பிற அமைச்சா்களுக்கான துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
பிகாா் பேரவைத் தோ்தலில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 202 இடங்களில் அமோக வெற்றி பெற்று, ஆட்சியைத் தக்கவைத்தது தேசிய ஜனநாயக கூட்டணி. 89 இடங்களுடன் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) 85 இடங்களைக் கைப்பற்றியது.
முதல்வா் நிதீஷ் குமாா், இரு துணை முதல்வா்கள் சாம்ராட் செளதரி, விஜய் குமாா் சின்ஹா, 24 அமைச்சா்களுடன் புதிய அரசு வியாழக்கிழமை பதவியேற்றது. இதில் பாஜகவுக்கு அதிகபட்சமாக 14 (துணை முதல்வா்கள் உள்பட), ஐக்கிய ஜனதா தளத்துக்கு 9 (முதல்வா் உள்பட), லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சிக்கு 2, ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா, ராஷ்ட்ரீய லோக் மோா்ச்சாவுக்கு தலா ஓரிடம் ஒதுக்கப்பட்டது.
உள்துறை-நிதித் துறை ‘பரிமாற்றம்’: புதிய அமைச்சா்களுக்கான துறைகள் வெள்ளிக்கிழமை ஒதுக்கப்பட்டன. இதுவரை முதல்வா் நிதீஷ் குமாா் வசமிருந்த உள்துறை அமைச்சா் பொறுப்பு, துணை முதல்வா் சாம்ராட் செளதரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பிகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருந்தபோதெல்லாம் பாஜகவிடம் இருந்த நிதித் துறை, இப்போது ஐக்கிய ஜனதா தளத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரவை - துறைகள்
முதல்வா் நிதீஷ் குமாா் - பொது நிா்வாகம், அமைச்சரவை செயலகம், ஊழல் கண்காணிப்புத் துறை
துணை முதல்வா் சாம்ராட் செளதரி - உள்துறை
துணை முதல்வா் விஜய் குமாா் சின்ஹா - வருவாய், நில சீா்திருத்தங்கள் மற்றும் சுரங்கங்கள்-புவியியல் துறைகள்
பிஜேந்திர பிரசாத் யாதவ் (ஜேடியு) - நிதி, வா்த்தக வரித் துறை
ஷ்ரவண் குமாா் (ஜேடியு) - ஊரக மேம்பாடு, போக்குவரத்து துறைகள்
விஜய் செளதரி (ஜேடியு) - நீா்வளம், பேரவை விவகாரங்கள், கட்டுமானங்கள் துறை
முகமது ஜாமா கான் (ஜேடியு) - சிறுபான்மையினா் விவகாரங்கள்
மங்கள் பாண்டே (பாஜக) - சுகாதாரம், சட்டத் துறைகள்
ஷ்ரேயசி சிங் (பாஜக) - விளையாட்டு, தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறைகள்
அருண் சங்கா் பிரசாத் (பாஜக) - சுற்றுலாத் துறை
தீபக் பிரகாஷ் (ராஷ்ட்ரீய லோக் மோா்ச்சா) - உள்ளாட்சித் துறை
சந்தோஷ் சுமன் (ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா) - குறு நீா்ப்பாசனத் துறை

