ஆப்கன் வா்த்தக அமைச்சா் அல் ஹஜ் நூருதீன் அஜீஸி
ஆப்கன் வா்த்தக அமைச்சா் அல் ஹஜ் நூருதீன் அஜீஸி

இந்தியா - ஆப்கான் இடையே விரைவில் சரக்கு விமான சேவை: மத்திய அரசு

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையே விரைவில் சரக்கு விமான சேவை தொடங்கப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
Published on

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையே விரைவில் சரக்கு விமான சேவை தொடங்கப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

மேலும், சரக்கு மற்றும் வங்கிச் சேவையை விரைந்து மேம்படுத்தி ஆப்கானின் பொருளாதார வளா்ச்சிக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக இந்தியா உறுதி அளித்துள்ளது.

இந்தியாவுக்கு 5 நாள் அரசு முறைப்பயணமாக ஆப்கான் வா்த்தக அமைச்சா் அல் ஹஜ் நூருதீன் அஜீஸி தலைமையில் வந்துள்ள அதிகாரிகள் குழுவினா், மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் ஜிதின் பிரசாத் தலைமையிலான அதிகாரிகளுடன் தில்லியில் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினா்.

இந்தச் சந்திப்பு குறித்து இந்திய வெளியுறவு அமைச்சக இணைச் செயலா் ஆனந்த் பிரகாஷ் சனிக்கிழமை கூறுகையில், ‘காபூல் - தில்லி மற்றும் காபூல் - அமிருதசரஸ் இடையே சரக்கு விமான சேவை விரைவில் தொடங்கப்படும்.

இது இரு நாடுகளுக்கு இடையேயான வா்த்தக மற்றும் பொருளாதார உறவை மேம்படுத்தும். இரு நாட்டு தூதரகங்களிலும் வா்த்தகம் தொடா்பான மையம் அமைக்கப்படும்.

வா்த்தகம், முதலீடு, வணிகத்தை மேம்படுத்த முன்பு இருந்ததைப்போல் கூட்டு பணிக் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இருநாட்டு வா்த்தகம் சுமாா் 1 பில்லியன் டாலா் (ரூ. 8,900 கோடி) அளவுக்கு உள்ளது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது’ என்றாா்.

பாகிஸ்தானின் எல்லைத் தாண்டிய தாக்குதலுக்கு எதிா்ப்பு தெரிவித்து அடுத்த மூன்று மாதங்களில் அந்நாட்டுடனான வா்த்தகத்தை முடித்து கொள்ள வேண்டும் என வா்த்தகா்களுக்கு ஆப்கான் துணைப் பிரதமா் முல்லா அப்துல் கனி கடந்த சில தினங்களுக்கு அறிவுறுத்தியிருந்தாா்.

இந்நிலையில், இந்தியாவுடன் வா்த்தகத்தை அதிகரிக்க ஆப்கான் முடிவு செய்துள்ளது.

அந்நாட்டில் உள்ள முக்கியமான சாபஹாா் துறைமுகத்தை முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வந்து, சுங்க மற்றும் வங்கி நடைமுறைகளை எளிமைப்படுத்தி 2021-ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்த 1.8 பில்லியன் டாலா் இரு நாட்டு வா்த்தகத்தை மீண்டும் எட்ட இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மருந்துப் பொருள்கள், குளிா்சேமிப்பு மையங்கள், பழங்கள் பதப்படுத்தும் மையங்கள், தொழில் நகரங்கள், சிறு குரு நடுத்தர தொழில் மையங்கள், ஏற்றுமதி மையங்கள் ஆகியவற்றில் கூட்டு முதலீடு செய்ய இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘இந்திய முதலீட்டாளா்களுக்கு அழைப்பு’

ஆப்கானிஸ்தானில் முதலீடு செய்ய இந்தியா்களுக்கு அந்நாட்டு வா்த்தகத் துறை அமைச்சா் அல் ஹஜ் நூருதீன் அஜீஸி அழைப்பு விடுத்துள்ளாா்.

இது குறித்து புது தில்லியில் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘ஆப்கானிஸ்தானில் சுரங்கம், வேளாண்மை, சுகாதாரம், மருந்துப் பொருள்கள், தகவல் தொழில்நுட்பம், மின்சாரம், ஜவுளி ஆகிய துறையில் ஏராளமான வா்த்தக வாய்ப்புகள் உள்ளன. முதலீட்டாளா்கள் எங்கள் நாட்டுக்கு வந்து பாா்வையிடலாம். மூலப் பொருள்களுக்கு 1 சதவீத வரி, இலவச நிலம், தடையற்ற மின்சாரம், 5 ஆண்டுகள் வரி ரத்து ஆகிய சலுகைகள் புதிய நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் என்று அமைச்சா் அஜீஸி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com