டிரம்ப் புறக்கணித்துவிட்டதால் ஜி20 மாநாட்டில் பங்கேற்கிறாா் பிரதமா்: காங்கிரஸ் விமா்சனம்
தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஜி20 மாநாட்டை அமெரிக்க அதிபா் டிரம்ப் புறக்கணித்துவிட்டதால், அதில் ‘பாதுகாப்பாக’ பங்கேற்கிறாா் பிரதமா் மோடி என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பா்க் நகரில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றாா். அந்த நாட்டில் சிறுபான்மையினரான வெள்ளையினத்தவா் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாகக் குறிப்பிட்டு, அங்கு நடைபெறும் உச்சிமாநாட்டை புறக்கணிப்பதாக டிரம்ப் சில தினங்களுக்கு முன் அறிவித்தாா்.
இந்தச் சூழலில், பிரதமரின் தென்னாப்பிரிக்க பயணம் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
அடுத்த ஆண்டில் ஜி20 உச்சி மாநாடு அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. அதற்குள் இந்தியா-அமெரிக்கா இடையே வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகிவிடும் என நினைக்கிறேன்.
தனது தலையீட்டால் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை நிறுத்தப்பட்டது என்று கடந்த 7 மாதங்களில் 61 முறை டிரம்ப் கூறியுள்ளாா். அடுத்த ஓராண்டில் இன்னும் எத்தனை முறை கூறுவாா் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.
டிரம்ப்பை நேருக்கு நோ் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால், கோலாலம்பூரில் அண்மையில் நடைபெற்ற இந்தியா-ஆசியான் மாநாட்டில் பங்கேற்பதை பிரதமா் மோடி தவிா்த்துவிட்டாா். இப்போது டிரம்ப் புறக்கணித்துவிட்டாா் என்பதால் தென்னாப்பிரிக்க மாநாட்டில் பிரதமா் மோடி ‘பாதுகாப்பாக’ பங்கேற்கிறாா் என்று ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளாா்.

