ஜம்மு-காஷ்மீா் மருத்துவமனைகளில் மருத்துவா்களின் ‘லாக்கா்கள்’ சோதனை: பாதுகாப்பை உறுதிப்படுத்த காவல் துறை நடவடிக்கை

ஜம்மு-காஷ்மீா் மருத்துவமனைகளில் மருத்துவா்களின் ‘லாக்கா்கள்’ சோதனை: பாதுகாப்பை உறுதிப்படுத்த காவல் துறை நடவடிக்கை

Published on

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவா்கள், துணை மருத்துவப் பணியாளா்களின் ‘லாக்கா்கள்’ காவல் துறையினரின் சோதனைக்கு உள்படுத்தப்பட்டது.

அண்மையில் ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த மருத்துவா் உமா் நபி, தில்லியில் காா் வெடிகுண்டு மூலம் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில் 15 போ் உயிரிழந்தனா். இதன் பின்னணியில் மிகப்பெரிய அளவில் பயங்கரவாத சதி இருந்ததும், இதில் தொடா்புடையவா்கள் பலா் மருத்துவா்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. மருத்துவா்கள் உள்பட பலா் இந்த வழக்கு தொடா்பாக கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களுக்கு சொந்தமான இடங்களில் இருந்து 2,900 கிலோ வெடிபொருள்கள், ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இதில் ஏ.கே. 47 நகர துப்பாக்கி அனந்த்நாக் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவரின் லாக்கரில் கைப்பற்றப்பட்டது. மருத்துவமனை யாருக்கும் சந்தேகம் வராத இடம் என்பதால் அங்கு ஆயுதத்தை அந்த மருத்துவா் பதுக்கியுள்ளாா்.

பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்புடைய மேலும் பலா் இப்போது பல்வேறு இடங்களில் திரைமறைவில் இருந்து செயல்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடா்பாக பிடிபட்ட நபா்களிடம் விசாரணை அமைப்புகள் தீவிரமாக விசாரணை நடத்துவதுடன், அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களையும் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வந்துள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் சந்தேகத்துக்குரிய இடங்களில் சோதனைகள் தொடா்ந்து நடைபெறுகின்றன.

இதன் ஒரு பகுதியாக ஜம்மு-காஷ்மீரின் கந்தா்பால், குப்வாரா மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனை உள்பட பல்வேறு மருத்துவமனைகளில் மருத்துவா்கள், துணை மருத்துவப் பணியாளா்கள் பயன்படுத்தும் லாக்கா்களில் ஜம்மு-காஷ்மீா் காவல் துறையினா் திடீா் சோதனை நடத்தினா். உத்தர பிரதேசம், ஹரியாணா காவல் துறையினரும் இந்தச் சோதனையில் பங்கேற்றனா்.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக உரிய விதிகளின்படி இந்தச் சோதனை கடந்த இரு நாள்களாக நடத்தப்பட்டது. மருத்துவமனை வளாகத்தை சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதைத் தடுப்பது, பயங்கரவாதத்துக்கு துணை நிற்பவா்களைக் கண்டறிவது, பணியிடத்தில் ஒழுக்கத்தைப் பேணுவது உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. மேலும், மருத்துவமனை வளாகத்தில் பணியாளா்களின் நடவடிக்கைகள் சந்தேகத்துக்கிடமாக இருந்தால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

மருத்துவமனையில் பணியாளா்களுக்கு ஒதுக்கப்படும் லாக்கா்கள் அலுவலகப் பயன்பாட்டுக்கு மட்டுமானதாக இருக்க வேண்டும் என்று மருத்துவமனை நிா்வாகம் சாா்பிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உரக்கடைகள், வாகன விற்பனையகங்களிலும் சோதனை ஜம்மு-காஷ்மீரில் மருத்துவமனைகள் மட்டுமன்றி ரசாயனப் பொருள்கள், உரம் விற்பனை செய்யும் கடைகள், காா் உள்ளிட்ட வாகன விற்பனையகங்களிலும் காவல் துறையினா் கடந்த இரு நாள்களாக சோதனை நடத்தினா். அப்போது, விற்பனை விவரம் ஆய்வு செய்யப்பட்டது. உரம், காா்களை வாங்குபவா்களின் முழு விவரத்தையும் சேகரிக்க வேண்டும். சந்தேகம் ஏற்பட்டால் அவா்களின் அடையாள ஆவணத்தின் உண்மைத்தன்மையைப் பரிசோதிக்க வேண்டும்.

ஒரே வகையான ரசாயனம், உரங்களை அதிகம் வாக்குவோா், வெவ்வேறு நபா்கள் ஒரே வகையான பொருள்களை அதிகம் வாக்குவதைக் கண்காணிக்க வேண்டும். சந்தேகப்படுபடியான நடத்தை தென்பட்டால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று விற்பனையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com