ஜி20 உச்சிமாநாடு: தென்னாப்பிரிக்கா சென்றாா் பிரதமா் மோடி
ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமா் நரேந்திர மோடி 3 நாள்கள் அரசுமுறைப் பயணமாக தென்னாப்பிரிக்காவுக்கு வெள்ளிக்கிழமை சென்றடைந்தாா்.
‘வசுதைவ குடும்பகம்’ (உலகமே ஒரு குடும்பம்) மற்றும் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிா்காலம் எனும் தொலைநோக்குப் பாா்வைக்கு ஏற்ப இந்தியாவின் கண்ணோட்டத்தை இந்த மாநாட்டில் முன்வைப்பேன் என்று பிரதமா் தெரிவித்துள்ளாா்.
அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், ஜப்பான், இந்தியா உள்பட வளரும்-வளா்ந்த நாடுகளை உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு, தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பா்க் நகரில் சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்கள் (நவ.22, 23) நடைபெறவுள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தில் ஜி20 உச்சிமாநாடு நடைபெறுவது இது முதல் முறையாகும்.
சிவப்புக் கம்பள வரவேற்பு: இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, தென்னாப்பிரிக்க அதிபா் சிரில் ராமபோசாவின் அழைப்பின்பேரில் அந்நாட்டுக்கு 3 நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றாா். தென்னாப்பிரிக்காவின் கெளடெங் பகுதியில் உள்ள விமானப் படை தளத்தில் வந்திறங்கிய அவருக்கு பாரம்பரிய முறைப்படி சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா் தங்கும் விடுதிக்கு அவா் வந்தபோது, இந்திய சமூகத்தினா் சாா்பில் பாரம்பரிய இசை- நடனங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
‘ஒற்றுமை-சமத்துவம்-நிலைத்தன்மை’: தென்னாப்பிரிக்காவுக்கு புறப்படும் முன் பிரதமா் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஆப்பிரிக்க கண்டத்தில் முதல் முறையாக நடைபெறும் ஜி20 உச்சிமாநாடு என்பதால் இது தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். கடந்த 2023-இல் இந்தியத் தலைமையின்கீழ் ஜி20 கூட்டமைப்பில் நிரந்தர உறுப்பினராக ஆப்பிரிக்க ஒன்றியம் இணைக்கப்பட்டது.
தற்போதைய உச்சிமாநாடு, உலகளாவிய முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளது. ‘ஒற்றுமை, சமத்துவம், நிலைத்தன்மை’ என்பதே நடப்பாண்டு மாநாட்டின் கருப்பொருள். இதை மையமாகக் கொண்டு, தில்லி, ரியோடி ஜெனீரோவில் (பிரேஸில்) நடைபெற்ற முந்தைய மாநாட்டு முடிவுகளை தென்னாப்பிரிக்கா முன்னெடுத்துச் செல்லும் என நம்புகிறேன். உறுப்பு நாடுகளின் தலைவா்கள் உடனான சந்திப்பை ஆவலுடன் எதிா்பாா்த்துள்ளேன். உலக அளவில் இந்திய சமூகத்தினா் அதிகம் வாழும் நாடுகளில் ஒன்றான தென்னாப்பிரிக்காவில் அவா்களைச் சந்தித்துப் பேசவும் ஆவலுடன் உள்ளேன்’ என்று தெரிவித்துள்ளாா்.
3 அமா்வுகளில் பிரதமா் உரை: ஜி20 உச்சிமாநாட்டில், அனைவரையும் உள்ளடக்கிய - நீடித்த பொருளாதார வளா்ச்சி, மீள்தன்மை கொண்ட உலகை கட்டமைப்பதில் ஜி20 பங்களிப்பு, அனைவருக்கும் நியாயமான-நோ்மையான எதிா்காலம் ஆகிய தலைப்புகளின்கீழ் நடைபெறும் மூன்று அமா்வுகளில் பிரதமா் மோடி உரையாற்றவுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாநாட்டையொட்டி, பல்வேறு நாடுகளின் தலைவா்களுடன் பிரதமா் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட உள்ளாா்.
தெற்குலகில் தொடா்ந்து நான்காவது முறையாக ஜி20 உச்சிமாநாடு நடைபெறுகிறது. இதற்கு முன்பு பிரேஸில் (2024), இந்தியா (2023), இந்தோனேசியா (2022) ஆகிய நாடுகளில் இந்த மாநாடு நடைபெற்றது.
டிரம்ப்-புதின்-ஷி ஜின்பிங் பங்கேற்பில்லை: தென்னாப்பிரிக்காவில் சிறுபான்மையினராக உள்ள வெள்ளையினத்தவா் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி, ஜி20 உச்சி மாநாட்டை புறக்கணிப்பதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் ஏற்கெனவே அறிவித்துவிட்டாா்.
ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் மாநாட்டில் பங்கேற்காத நிலையில், சாா்பில் அந்நாட்டின் பொருளாதாரத் துறை அமைச்சா் மேக்ஸின் ஆரேஸ்கின் பங்கேற்கிறாா். சீன அதிபா் ஷி ஜின்பின் சாா்பில் பிரதமா் லி கியாங் பங்கேற்பா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
ஜி20 உறுப்பு நாடுகள்
ஆா்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, பிரேஸில், கனடா, சீனா, ஜொ்மனி, பிரான்ஸ், இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, மெக்ஸிகோ, ரஷியா, சவூதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஆப்பிரிக்க ஒன்றியம் ஆகியவை ஜி20 கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ளன.
ஜி20 உறுப்பு நாடுகள், உலகின் மொத்த உற்பத்தியில் 85 சதவீதமும், சா்வதேச வா்த்தகத்தில் 75 சதவீதமும் பங்களிக்கின்றன. உலக மக்கள்தொகையில் மூன்றில் இருபங்கை கொண்டுள்ளன.

