துபை கண்காட்சியில் தேஜஸ் விமானம் விழுந்து எரிந்தது! விமானி பலி!

துபை கண்காட்சியில் இந்திய விமானப் படையின் தேஜஸ் விமானம் விபத்து...
Indian fighter jet Tejas crashes at Dubai AirShow
தேஜஸ் விமானம் விபத்துx
Updated on
1 min read

துபையில் நடைபெற்று வரும் விமானக் கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் இன்று(வெள்ளிக்கிழமை) விபத்துக்குள்ளானது.

துபையில் பல்வேறு நாடுகளின் விமானங்கள் பங்கேற்கும் விமானக் கண்காட்சி கடந்த நவ. 17 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கண்காட்சியின் இறுதி நாளான இன்று(நவ. 21) சாகசத்தில் ஈடுபட்ட இந்தியாவின் பெருமைமிகு தேஜஸ் விமானம் கீழே விழுந்து நொறுங்கி பின்னர் தீப்பிடித்து எரிந்தது. துபை விமான நிலையம் அருகே உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் 2.10 மணியளவில் இந்த விபத்து நடந்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தை உறுதி செய்துள்ள இந்திய விமானப்படை, விமானத்தை இயக்கிய விமானி உயிரிழந்ததாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

இதுபற்றி இந்திய விமானப்படை தனது எக்ஸ் பக்கத்தில்,

"துபை விமான கண்காட்சியில் இந்திய விமானப் படையின் தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி உயிரிழந்தார்.

அவரது இழப்புக்கு இந்திய விமானப்படை ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது, இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருடன் இந்திய விமானப்படை துணை நிற்கிறது.

விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளது.

கடந்த 2 நாள்களாக துபை கண்காட்சியில் தேஜஸ் விமானம் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. இன்றைய அட்டவணையில் தேஜஸ் விமானம் 3 ஆவதாக இடம்பெற்றிருந்தது. தேஜஸ் விமானத்தைப் பார்க்க பார்வையாளர்கள் அதிகம் கூடியிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் விமானம் விபத்துக்குள்ளானது அங்கிருந்த பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் மக்கள் யாரும் இல்லை. அதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தேஜஸ்

இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் மிகவும் இலகுரக போர் விமானம். ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இந்திய விமானப்படையின் பெருமைமிகு போர் விமானம். 2001 ஆம் ஆண்டு முதல் விமானம் இயக்கப்பட்ட நிலையில் 2003 ஆம் ஆண்டு இதற்கு தேஜஸ் என்று பெயரிடப்பட்டது.

2015 ஆம் ஆண்டு முதல் இது விமானப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தேஜஸ் விமானத்தில் எண்ணெய் கசிவு இருந்ததாக சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் விடியோ வெளியான நிலையில் அதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Indian fighter jet Tejas crashes at Dubai Air Show

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com