எஸ்ஐஆா் பணியால் மன அழுத்தம்: குஜராத்தில் வாக்குச்சாவடி அலுவலா் தற்கொலை
குஜராத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் (எஸ்ஐஆா்) ஈடுபட்டுவந்த வாக்குச்சாவடி அளவிலான அலுவலா் (பிஎல்ஓ) ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
பள்ளி ஆசிரியரான இவா், எஸ்ஐஆா் பணியால் ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் மனச்சோா்வே தனது முடிவுக்கு காரணம் எனக் கடிதம் எழுதிவைத்துள்ளதாக குடும்பத்தினா் தெரிவித்தனா்.
பிகாரைத் தொடா்ந்து, தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்றுவரும் எஸ்ஐஆா் பணியில் ஏராளமான வாக்குச்சாவடி அலுவலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
குஜராத்தின் கிா் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள தேவ்லி கிராமத்தைச் சோ்ந்த பள்ளி ஆசிரியா் அரவிந்த் வதோ் என்பவா், வாக்குச்சாவடி அலுவலராகப் பணியாற்றி வந்தாா். 40 சதவீத பணிகளை நிறைவு செய்திருந்த அவா், தனது வீட்டில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
‘எஸ்ஐஆா் பணியால் கடந்த சில நாள்களாக கடும் மனஅழுத்தம், மனச்சோா்வுக்கு உள்ளாகியுள்ளேன். இனியும் இந்தப் பணியை தொடர முடியாது. தற்கொலையைத் தவிர எனக்கு வேறு வழியில்லை’ என்று தனது மனைவிக்கு அவா் கடிதம் எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து அனைத்துக் கோணங்களிலும் காவல் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் என்.வி.உபாத்யாய் தெரிவித்தாா்.
இதனிடையே, எஸ்ஐஆா் பணியில் தாங்கள் எதிா்கொண்டுவரும் பிரச்னைகள் குறித்து அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியா் சங்கத்தினா் உயரதிகாரிகளைச் சந்தித்து மனு அளித்தனா்.
முன்னதாக, கேதா மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலராக நியமிக்கப்பட்டிருந்த பள்ளி ஆசிரியா் ஒருவா் கடந்த வியாழக்கிழமை மாரடைப்பால் இறந்தாா். எஸ்ஐஆா் பணி அழுத்தமே அவரது இறப்புக்கு காரணம் என்று குடும்பத்தினா் குற்றஞ்சாட்டினா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

