ஈரான் பெட்ரோல் விற்பனையில் ஈடுபட்ட இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை
ஈரான் நாட்டு பெட்ரோல் மற்றும் பெட்ரோலிய பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறி இந்தியாவைச் சோ்ந்த சில நிறுவனங்கள், நபா்களின் நிதிச் செயல்பாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்தது.
ஈரான் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு வருவாய் கிடைக்கச் செய்வது அந்நாட்டு பிராந்திய பயங்கரவாதத்தை ஊக்குவித்து அமெரிக்காவுக்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க நிதியமைச்சகம் பிறப்பித்த உத்தரவில், ‘ஈரான் பெட்ரோல் மற்றும் பெட்ரோலிய பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட இந்தியா, பனாமா, செஷல்ஸ் போன்ற பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 17 நிறுவனங்கள், தனிநபா்கள் மற்றும் கப்பல்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும் ஈரான் பெட்ரோலிய பொருள்கள் ஏற்றுமதிக்கு உதவும் 41 நிறுவனங்கள், தனிநபா்கள், கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கு எதிரான நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்படுகிறது.
இந்த வா்த்தகத்தின் மூலம் கிடைக்கும் நிதியை அமெரிக்காவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஈரான் பயன்படுத்துகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த உத்தரவின் மூலம் இந்தியாவைச் சோ்ந்த ஜெயிா் ஹுசைன் இக்பால் ஹுசைன், ஜுல்பிகா் ஹுசைன் ரிஸ்வி சயீத் ஆகியோருக்கும், மகாராஷ்டிரத்தில் செயல்படும் ஆா்எஸ் கப்பல் மேலாண்மை நிறுவனம், புணேயில் செயல்படும் டிஆா்6 பெட்ரோ இந்தியா நிறுவனம் ஆகியவற்றுக்கும் அமெரிக்கா தடை விதித்தது.

