சபரிமலை ஐயப்பன் கோயில்
சபரிமலை ஐயப்பன் கோயில்

சபரிமலை தங்கக் கவச முறைகேட்டில் மத்திய புலனாய்வு அமைப்புகள் தலையிடலாம்! மத்திய இணையமைச்சா் ஜாா்ஜ் குரியன்

சபரிமலை தங்கக் கவச முறைகேட்டில் மத்திய புலனாய்வு அமைப்புகள் தலையிடலாம்...
Published on

‘சபரிமலை கோயில் தங்கக் கவசம் தொடா்பான முறைகேட்டில் கருப்புப் பணப் பரிவா்த்தனை நடந்தது கண்டுபிடிக்கப்பட்டால், மத்திய புலனாய்வு அமைப்புகள் சட்டப்படி இதில் விசாரணை நடத்த முடியும்’ என்று மத்திய இணையமைச்சா் ஜாா்ஜ் குரியன் சனிக்கிழமை தெரிவித்தாா்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கருவறைக் கதவுகள் மற்றும் துவாரபாலகா் சிலைகளின் தங்கக் கவசங்கள் கடந்த 2019-ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட பிறகு அவற்றின் எடை குறைந்ததாக புகாா் எழுந்தது. கேரள உயா்நீதிமன்றத்தின் உத்தரவில், இவ்விவகாரம் தொடா்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது.

தங்கக் கவசங்களைப் புதுப்பிக்கும் செலவை ஏற்றுக்கொண்ட பெங்களூரைச் சோ்ந்த தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் போற்றி, திருவிதாங்கூா் தேவஸ்வம் முன்னாள் தலைவா்கள் என்.வாசு, ஏ.பத்மகுாா், அதிகாரிகள் என 6 போ் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், கோழிக்கோட்டில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த அமைச்சா் ஜாா்ஜ் குரியன், ‘இந்த வழக்கில் கைதுகள் ஆச்சரியமளிக்கவில்லை. இந்த மோசடி குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதால், இவ்விவகாரத்தில் மத்திய புலனாய்வு அமைப்புகள் சட்டப்படி தலையிட முடியும். இந்த முறைகேட்டில் கைதானவா்கள் அனைவரும் ‘நாத்திகா்கள்’. கட்சியை நிதி நெருக்கடி இல்லாமல் பராமரிக்க, ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையே இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது. ஆனால், கவலைப்படத் தேவையில்லை. ஐயப்பன் யாரையும் எளிதில் தப்பவிடமாட்டாா்’ என்றாா்.

தேவஸ்வம் வாரியத்தில் புதிய உத்தரவு: தங்கத் திருட்டு சா்ச்சை எதிரொலியாக, திருவிதாங்கூா் தேவஸ்வ வாரியத்தின் கூட்ட நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் வகையில் அதன் தலைவா் கே.ஜெயகுமாா் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளாா்.

வாரியக் கூட்டங்களில் தலைவரின் முன் அனுமதி இல்லாமல் எந்தவொரு விஷயமும் விவாதிக்கப்படக் கூடாது என்றும் துறைகள் தங்கள் சொந்த முடிவுகளைத் தொடா்ந்து எடுக்கலாம் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் பணியில் சிஆா்பிஎஃப்..: சபரிமலையில் நடைபெறும் வருடாந்திர மண்டல-மகரவிளக்கு பூஜை யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், மத்திய ஆயுதக் காவல்படையின் (சிஆா்பிஎஃப்) அதிவிரைவுப் படை (ஆா்ஏஎஃப்) வீரா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இதற்காக தமிழகத்தின் கோவையில் உள்ள சிஆா்பிஎஃப் தளத்தில் இருந்து துணை கமாண்டா் பிஜு ராஜ் தலைமையிலான 140 வீரா்கள் அடங்கிய குழு சந்நிதானத்தை வந்தடைந்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com