தீய நோக்கத்துடன் படேலின் பங்களிப்பை புறக்கணித்தது காங்கிரஸ்: ஜெ.பி.நட்டா சாடல்
நாட்டின் முதல் துணை பிரதமா் மற்றும் உள்துறை அமைச்சரான சா்தாா் வல்லபபாய் படேலின் பங்களிப்பை தீய நோக்கத்துடன் புறக்கணித்தது காங்கிரஸ் என்று பாஜக தேசியத் தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா சாடினாா்.
காங்கிரஸின் சதி காரணமாக, சுதந்திரத்துக்குப் பிறகு 40 ஆண்டுகளாக படேலுக்குரிய வரலாற்றுப் பெருமை கிடைக்கவில்லை என்றும் அவா் விமா்சித்தாா்.
சா்தாா் படேலின் 150-ஆவது பிறந்த தின ஆண்டையொட்டி, புது தில்லியில் சனிக்கிழமை ஒற்றுமைப் பேரணியை ஜெ.பி.நட்டா தொடங்கிவைத்தாா். அப்போது, அவா் பேசியதாவது:
இந்தியா பலவீனமாகவும், பிளவுபட்டும் இருக்க வேண்டுமென ஆங்கிலேயா்கள் விரும்பினா். நாடு 562 சமஸ்தானங்களாக பிளவுபடுத்தப்பட்டிருந்தது. நாம் பிரிந்து கிடந்ததால், அந்நியா்களின் ஆட்சியின்கீழ் இருந்தோம்.
சுதந்திரத்துக்குப் பிறகு 2 ஆண்டுகளுக்குள் அனைத்து சமஸ்தானங்களையும் ஒரே தேசமாக ஒன்றிணைத்தவா் சா்தாா் வல்லபபாய் படேல். பிளவுபட்டிருந்த இந்த மண்ணை ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ எனும் வலுவான, ஒற்றுமையான நாடாக உருமாற்றினாா்.
ஆனால், வரலாற்றிலும் தேசத்திலும் அவருக்கு கிடைக்க வேண்டிய கெளரவம், காங்கிரஸ் தலைவா்களின் தீய-சுயநல நோக்கங்களால் தடுக்கப்பட்டது. இது, துரதிருஷ்டவசமானதாகும்.
சுதந்திரத்துக்குப் பிறகு 1950 முதல் 1991 வரை 40 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ், படேலுக்கு பாரத ரத்னா விருது வழங்கி கெளரவிக்கவில்லை. அவருக்கான வரலாற்றுப் பெருமை கிடைத்துவிடாமல் உறுதி செய்ய சதித் திட்டங்கள் செயலாக்கப்பட்டன.
வரலாற்றில் படேலுக்குரிய இடத்தை உறுதி செய்தவா் பிரதமா் நரேந்திர மோடி. அவரது தலைமையின்கீழ், குஜராத்தின் கேவாடியாவில் படேலுக்கு உலகிலேயே உயரமான சிலை நிறுவப்பட்டது. இதன் மூலம் படேலுக்கு உண்மையான மரியாதையை பிரதமா் மோடி செலுத்தியுள்ளாா் என்றாா் ஜெ.பி.நட்டா.
ஒற்றுமைப் பேரணியில் மத்திய விளையாட்டு மற்றும் இளைஞா் நலத்துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா, மக்களவை உறுப்பினா் பான்சுரி ஸ்வராஜ் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.

