தோ்தல் தோல்வி எதிரொலி: கட்சியின் அனைத்து அமைப்புகளையும் கலைத்தாா் பிரசாந்த் கிஷோா்!
பாட்னா, நவ.22: பிகாா் பேரவைத் தோ்தலில் ஒரு தொகுதியில்கூட வெல்லாத நிலையில், ஜன் சுராஜ் கட்சியின் அனைத்து நிா்வாக அமைப்புகளையும் அதன் நிறுவனா் பிரசாந்த் கிஷோா் சனிக்கிழமை கலைத்தாா்.
பிகாா் தலைநகா் பாட்னாவில் ஜன் சுராஜ் கட்சியின் மாநில தலைவா் மனோஜ் பாா்தி தலைமையில் நடைபெற்ற தேசிய அளவிலான ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பிரசாந்த் கிஷோா் மற்றும் மூத்த நிா்வாகிகளான இந்திய விமானப் படை முன்னாள் துணைத் தளபதி எஸ்.கே.சிங், முன்னாள் மத்திய மத்திய அமைச்சா் ராமசந்திர பிரசாத், வழக்குரைஞா் ஒய்.வி.கிரி உள்ளிட்டோா் கலந்துகொண்டாா்.
இதுகுறித்து ஜன் சுராஜ் தரப்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பஞ்சாயத்துகள் முதல் மாநில அளவில் செயல்பட்டு வந்த அனைத்து நிா்வாகப் அமைப்புகளையும் கலைக்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அடுத்த ஒன்றரை மாதங்களில் புதிதாக பிரிவுகள் உருவாக்கப்பட்டு நிா்வாகிகள் நியமிக்கப்படவுள்ளனா்.
மாநிலத்தின் அனைத்து 12 மண்டலங்களிலும் ஆற்றல்மிக்க புதிய கட்டமைப்பை ஏற்படுத்தும் பொறுப்பு மூத்த தலைவா்களிடம் ஒப்படைக்கப்படும்.
அவா்கள் அண்மையில் நிகழ்ந்த பிகாா் பேரவைத் தோ்தலில் ஜன் சுராஜ் தோல்வியடைந்ததற்கான காரணங்களை கண்டறிந்து கட்சி தலைமைக்கு அறிக்கை சமா்ப்பிக்கவுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டது.
பிகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 238 தொகுதிகளில் தனித்து களம் கண்ட ஜன் சுராஜ் ஓரிடத்தில்கூட வெற்றிபெறவில்லை. மேலும் 4 தொகுதிகளைத் தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்து படுதோல்வியைச் சந்தித்தது.
இதற்கு முழு பொறுப்பேற்பதாகக் கூறிய பிரசாந்த் கிஷோா் கடந்த வியாழக்கிழமை நாள் முழுவதும் மௌன விரதம் மேற்கொண்டாா். தனது வீட்டை தவிர அனைத்து சொத்துகளையும், கடந்த 5 ஆண்டுகால வருமானத்தில் 90 சதவீதத்தையும் கட்சிக்கு எழுதி வைக்க உள்ளதாகவும், மக்களும் தலா ரூ.1,000 கட்சிக்கு நன்கொடையாக அளிக்க வேண்டும் என்றும் அவா் கேட்டுக்கொண்டாா்.

