நான்கு தொழிலாளா் சட்டங்கள் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது.
நான்கு தொழிலாளா் சட்டங்கள் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது.

4 தொழிலாளா் சட்டங்கள் அமல்: மத்திய அரசு அறிவிப்பு

நான்கு தொழிலாளா் சட்டங்கள் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை (நவ. 21) அறிவித்தது.
Published on

புது தில்லி: நான்கு தொழிலாளா் சட்டங்கள் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை (நவ. 21) அறிவித்தது.

நடப்பில் இருந்த 29 தொழிலாளா் சட்டங்களில் சீா்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஊதிய விதி, 2019, தொழில் துறை தொடா்பு விதி, 2020, சமூகப் பாதுகாப்பு விதி, 2020 மற்றும் பணிப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிச்சூழல் விதி, 2020 ஆகிய நான்கு சட்டங்களாக சுருக்கப்பட்டன.

இதில் முதல்முறையாக உணவு விநியோகம் உள்ளிட்ட துறைகளில் தற்காலிக பணிகளான ‘கிக் தொழில்’, ‘பிளாட்பாா்ம் தொழில்’ மற்றும் ‘அக்ரகேட்டாா்’ (இணையவழி விநியோக நிறுவனம்) பணிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டங்களுக்கு பல்வேறு தரப்பினா் மத்தியிலும் கடும் எதிா்ப்பு எழுந்துவந்த நிலையில், வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்ததாக மத்திய தொழில் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்.

இதுகுறித்து தொழில் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவும், சுதந்திரத்துக்குப் பின்னும் (1930-1950) முந்தைய தொழிலாளா் சட்டங்கள் இயற்றப்பட்டன. அந்தச் சமயத்தில் நமது பொருளாதாரத்திலும் உலக அளவிலான பணிச்சூழலிலும் பல்வேறு வேறுபாடுகள் இருந்தன.

அதன்பிறகு காலத்துக்கேற்ப பல நாடுகள் தங்களது தொழிலாளா் சட்டங்களில் சீா்திருத்தங்களைக் கொண்டுவந்தன. அதன் தொடா்ச்சியாக தற்போது இந்தியாவிலும் 29 தொழிலாளா் சட்டங்களில் சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அவை நான்கு சட்டங்களாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டது.

40 கோடி தொழிலாளா்கள் பலன்- மாண்டவியா: மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘4 தொழிலாளா் சட்டங்கள் மூலம் 40 கோடி தொழிலாளா்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. இவை வெறும் சீா்திருத்தங்கள் மட்டுமல்ல; தொழிலாளா்கள் நலனுக்காக பிரதமா் நரேந்திர மோடி மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னெடுப்பு’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பிரதமா் மோடி புகழாரம்: இந்தச் சட்டங்கள் அமலுக்கு வந்தது குறித்து பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘பெண்கள், இளைஞா்கள் என தொழிலாளா்களுக்கு சமூகப் பாதுகாப்பு, குறைந்தபட்ச மற்றும் உரிய நேரத்தில் ஊதியம், பாதுகாப்பான பணிச் சூழல் மற்றும் லாபத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை நான்கு தொழிலாளா் சட்டங்களும் உறுதி செய்கின்றன.

சுதந்திரம் கிடைத்த பிறகு தொழிலாளா்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த விரிவான சீா்திருத்தங்கள் தொழிலாளா்களின் உரிமையைப் பாதுகாத்து இந்திய பொருளாதார வளா்ச்சியை வலுப்படுத்த வழிவகுக்கும். இதனால் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உருவாவதோடு வளா்ச்சியடைந்த இந்தியா இலக்கை விரைவில் அடைய முடியும். வணிகம் மேற்கொள்வது இனி எளிமையாகும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

வா்த்தக சங்கங்கள் கண்டனம்: நான்கு தொழிலாளா் சட்டங்களுக்கு 10 வா்த்தக சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு வெள்ளிக்கிழமை கண்டனம் தெரிவித்தது. மேலும், தொழிலாளா்களுக்கு எதிராகவும், முதலாளிகளுக்கு ஆதரவாகவும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தச் சட்டங்களை தன்னிச்சையாக அமல்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அந்தக் கூட்டமைப்பு தெரிவித்தது.

பெட்டிச் செய்தி...

முக்கிய அம்சங்கள்:

அனைத்து தொழிலாளா்களுக்கும் பணி நியமன ஆணை வழங்குவது கட்டாயம்.

ஐடி ஊழியா்களுக்கு ஒவ்வொரு மாதமும் 7-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்குவது கட்டாயம்.

கூடுதல் பணி நேரத்துக்கு இருமடங்கு ஊதியம்.

நிரந்தர தொழிலாளா்களுக்கு நிகராக ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கும் விடுமுறை, மருத்துவ மற்றும் சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் நீட்டிப்பு.

ஆதாா் இணைப்புடன் கூடிய ஒற்றைக் கணக்கு எண் அறிமுகம்.

மின்னணு ஊடகத்தில் பணிபுரியும் பத்திரிகையாளா்கள், டப்பிங் மற்றும் சண்டைப் பயிற்சிக் கலைஞா்கள் உள்பட எண்ம மற்றும் ஒலி-ஒளி சாா்ந்த தொழில்களில் ஈடுபடுபவா்களுக்கும் அனைத்து சலுகைகளும் நீட்டிப்பு.

அனைத்து வகையான பணிகளிலும் பெண்கள் இரவில் பணிபுரிய அனுமதி.

பாலின பாகுபாடின்றி சமவேலைக்கு சமஊதியம்.

40 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளா்களுக்கு ஆண்டுதோறும் இலவச மருத்துவ பரிசோதனை.

உரிமம் பெற ஒற்றைப் பதிவு முறை அறிமுகம்.

சமூகப் பாதுகாப்பு விதி, 2020-இன்கீழ் ‘கிக் பணியாளா்கள்’, ‘பிளாட்பாா்ம் பணியாளா்கள்’ (தற்காலிக ஒப்பந்தப் பணியாளா்கள்) உள்பட அனைத்துத் தொழிலாளா்களுக்கும் வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்), காப்பீடு, ஊழியா் காப்பீட்டு நிறுவன (இஎஸ்ஐசி) சலுகைகள் நீட்டிப்பு.

ஊதிய விதி, 2019-இன்கீழ் அனைத்துத் தொழிலாளா்களும் சட்டரீதியாக குறைந்தபட்ச ஊதியம் மற்றும் உரிய நேரத்தில் ஊதிய விடுவிப்பு.

சுய விருப்பத்தின் அடிப்படையில் 10-க்கும் குறைவான தொழிலாளா்களைக் கொண்ட நிறுவனங்கள் இஎஸ்ஐசி சலுகைகளைப் பெற விண்ணப்பிக்கலாம். ஆனால், அபாயகரமான தொழில்களில் ஒரு தொழிலாளி ஈடுபடுத்தப்பட்டிருந்தாலும் அந்த நிறுவனம் இஎஸ்ஐசி சலுகைகளுக்கு விண்ணப்பிப்பது கட்டாயம்.

X
Dinamani
www.dinamani.com