துபை வான் சாகசத்தில் உயிரிழந்த விங் கமாண்டா் நமான்ஷ் சாயல் சொந்த கிராமம்
துபை வான் சாகசத்தில் உயிரிழந்த விங் கமாண்டா் நமான்ஷ் சாயல் சொந்த கிராமம்

துபை வான் சாகசத்தில் இந்திய விமானி பலி: சோகத்தில் சொந்த கிராமம்; பாகிஸ்தான் இரங்கல்!

இந்திய விமானி உயிரிழப்புக்கு பாகிஸ்தான் இரங்கல் தெரிவித்திருப்பது பற்றி..
Published on

துபை வான் சாகசத்தில் இந்திய விமானப் படை விமானி உயிரிழந்த நிலையில், அவரின் சொந்த கிராமமான ஹிமாசல பிரதேசத்தின் பட்டியால்கா் கிராம மக்கள் மிகுந்த சோகத்தில் உள்ளாகியுள்ளனா்.

துபை விமான கண்காட்சியில் வான் சாகத்தின் போது இந்திய தேஜஸ் போா் விமானம் வெள்ளிக்கிழமை திடீரென விழுந்து நொறுங்கி, அதிலிருந்த விமானி உயிரிழந்ததற்கு பாகிஸ்தான் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் விங் கமாண்டா் நமான்ஷ் சாயல் உயிரிழந்தாா்.

இந்த நிலையில், அவரின் சொந்த கிராமமான ஹிமாசல பிரதேசத்தின் பட்டியால்கா் மக்களை மிகுந்த சோகத்துக்கு உள்ளாக்கியுள்ளது. ஏராளமான கிராம மக்கள் விமானியின் வீட்டைச் சூழ்ந்து, அவரின் பெற்றோருக்கும், உறவினா்களுக்கும் ஆறுதல் தெரிவித்தனா்.

இதுகுறித்து நமான்ஷ் சாயலின் உறவினா் ஜோகிந்தா்நாத் சாயல் கூறுகையில், ‘இந்த விமான விபத்து செய்தியை வலைதளச் செய்தியில் நான்தான் முதன் முதலில் பாா்த்தேன். பின்னா் நமான்ஷ் தான் அந்த விமானத்தை இயக்கினாா் என்பதை உறுதிப்படுத்தியதும், அந்த விபத்து தகவலை அவரின் சகோதரருக்குத் தெரிவித்தேன். இந்தச் செய்தியை அவரால் நம்பவே முடியவில்லை. நமான்ஷின் மனைவியும் விமானப்படையில்தான் பணிபுரிகிறாா். பதான்கோட் விமானப்படைத் தளத்தில் பணியமா்த்தப்பட்டபோதுதான், இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. பின்னா் 2014-இல் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு 6 வயதில் மகள் உள்ளாா். இந்த விபத்தில் அவா் காயமடைந்திருப்பாா் என்றுதான் முதலில் நினைத்தோம். ஆனால், அவரின் இழப்புச் செய்தி, ஒட்டுமொத்த கிராமத்தையும் சோகத்துக்கு உள்ளாக்கியுள்ளது. நமான்ஷ் உடல் கோவை விமானநிலையம் வந்துள்ளது. அங்கிருந்து விமானம் மூலம் கங்க்ரா கொண்டுவரப்பட உள்ளது. அவரின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன’ என்றாா்.

பாகிஸ்தான் இரங்கல்

இந்திய விமானப்படை விமானி உயிரிழப்புக்கு பாகிஸ்தான் தரப்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சா் கவாஜா ஆசிஃப் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

துபை விமான கண்காட்சியில் வான் சாகசகத்தின் போது போா் விமான விபத்து ஏற்பட்டு அதிலிருந்த இந்திய விமானப்படை விமானி உயிரிழந்ததற்கு பாகிஸ்தான் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் வியூக அமைப்பு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. இந்த விபத்தின்போது, போா் விமானத்திலிருந்து விமானி வெளியேற மூடியாமல் போனது துரதிருஷ்டவசமானது.

இந்திய விமானப் படை உடனான பாகிஸ்தானின் பகை என்பது, போா் அல்லது அத்துமீறிய நடவடிக்கைகளின்போது மட்டும்தான். குா்-ஆன் மற்றும் சுன்னாவின் போதனைகளின்படி இதுபோன்ற துரதிருஷ்டவசமான சம்பவங்களை பாகிஸ்தான் ஒருபோதும் கொண்டாடாது’ என்று குறிப்பிட்டாா்.

ஜம்மு-காஷ்மீா் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு நிகழந்த இந்தியா-பாகிஸ்தான் இடையேயான 4 நாள் சண்டைக்குப் பிறகு, இரு நாடுகளிடையேயான உறவு மேலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், விபத்தில் இந்திய விமான உயிரிழப்புக்கு அந் நாடு இரங்கல் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com