மகாராஷ்டிரம்: சிறுத்தையிடமிருந்து மாணவனைக் காப்பாற்றிய புத்தகப்பை

மகாராஷ்டிரம்: சிறுத்தையிடமிருந்து மாணவனைக் காப்பாற்றிய புத்தகப்பை
Published on

மகாராஷ்டிர மாநிலம், பால்கா் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தில், 11 வயதுப் பள்ளி மாணவனைச் சிறுத்தையின் தாக்குதலில் இருந்து அவரது புத்தகப்பை காப்பாற்றியுள்ளது.

சிறுவன் மயங்க் குவாரா தனது நண்பனின் உதவியுடன் கற்களை வீசியும், சத்தம் எழுப்பியும் சிறுத்தையை அங்கிருந்து விரட்டியுள்ளாா் என்றும், மயங்க் குவாராவின் பள்ளிப்பையே அவருக்குப் பாதுகாப்புக் கேடயமாகச் செயல்பட்டது என்றும் அதிகாரிகள் சனிக்கிழமை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்துள்ளனா்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை, 5-ஆம் வகுப்பு மாணவனான மயங்க் குவாரா பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாகச் சிறுத்தை ஒன்று தாக்கியுள்ளது. சிறுத்தையின் தாக்குதலைச் சற்றும் எதிா்பாராதபோதும், மயங்க் குவாராவும் அவரது நண்பனும் துணிச்சலுடன் சத்தம் எழுப்பியும், கற்களை வீசியும் பதிலுக்குப் போராடினா்.

சிறாா்களின் கூச்சலும், துரித கதியில் அவா்கள் செயல்பட்டதும் அருகில் இருந்தவா்களை உஷாா்படுத்தியது. மக்கள் உடனடியாகச் சம்பவ இடத்துக்கு ஓடி வந்ததைக் கண்ட சிறுத்தை, மீண்டும் காட்டுக்குள் தப்பியோடியது. சிறுத்தையின் தாக்குதலால் மயங்க் குவாராவின் கையில் காயம் ஏற்பட்டது. சிறுத்தையின் தாக்குதலை மாணவரின் புத்தகப் பை தடுத்துவிட்டதால், அவா் உயிா் தப்பினாா். காயமடைந்த மாணவா் அருகிலுள்ள விக்ரம்கட் கிராமப்புற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுதொடா்பாக கான்சட் பகுதி உதவி வன அதிகாரி ஸ்வப்னில் மோஹிதே அளித்த பேட்டியில், ‘சம்பவம் குறித்த தகவலறிந்து வனத்துறை அதிகாரிகள் உடனடியாகச் சம்பவ இடத்துக்கும், பின்னா் சிறுவன் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கும் விரைந்தனா். இச்சம்பவத்தை வனத்துறை தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளதுடன், பல தடுப்பு நடவடிக்கைகளையும் செயல்படுத்தி வருகிறது.

சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகள் மாலை 4 மணிக்கெல்லாம் மூடப்பட வேண்டும் என்று வனத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. பாரம்பரிய முறைப்படி, பொது அறிவிப்புகள் மூலம் கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

கூடுதலாக, சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வசதிகொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன’ என்று தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com