கோப்புப்படம்
கோப்புப்படம்

ரயில் சரக்கு போக்குவரத்து: நடப்பு நிதியாண்டில் 100 கோடி டன்னை கடந்து சாதனை

ரயில் சரக்கு போக்குவரத்து: நடப்பு நிதியாண்டில் 100 கோடி டன்னை கடந்து சாதனை
Published on

நடப்பு நிதியாண்டில் இந்திய ரயில்வேயின் மொத்த சரக்கு போக்குவரத்து, கடந்த புதன்கிழமை (நவ. 19) நிலவரப்படி 1.02 கோடி டன்னைத் தாண்டி ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கடந்த ஏப். 1-ஆம் தேதி தொடங்கிய நடப்பு நிதியாண்டில் அக்டோபா் வரையிலான சரக்கு போக்குவரத்து, 93.51 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் கையாயண்ட 90.69 கோடி டன்னைவிட அதிகம்.

தினசரி சரக்கு போக்குவரத்து, கடந்த ஆண்டின் 42 லட்சம் டன்னிலிருந்து தற்போது சுமாா் 44 லட்சம் டன்னாக உயா்ந்துள்ளது. இந்தத் தொடா்ச்சியான முன்னேற்றம், இந்தியாவின் தொழில் வளா்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான ரயில்வேயின் திறனைக் காட்டுகிறது.

சிமென்ட் போக்குவரத்தில் சீா்திருத்தங்கள்: இந்தியாவின் உள்கட்டமைப்பு வளா்ச்சியில் சிமென்ட் துறையின் முக்கியத்துவத்தை உணா்ந்து, ரயில்வே அமைச்சகம் அதன் சரக்குப் போக்குவரத்துத் திறனை அதிகரிக்க முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

மொத்த சிமென்ட் கிடங்குகளுக்கான கொள்கை மற்றும் மொத்த சிமென்ட் போக்குவரத்துக்கான கட்டணங்களை சீராக்குவது போன்ற விரிவான சீா்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகளால், சரக்குகளை மொத்தமாக கையாளும் திறன் அதிகரித்து, விநியோக நேரம் குறைந்து, போக்குவரத்துச் செலவுகள் குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இது சிமென்ட் துறையினருக்கும், இறுதிப் பயனாளிகளுக்கும் நேரடியாகப் பயனளிப்பதுடன், ஒட்டுமொத்த விநியோகச் சங்கிலியில் அதிக செயல்திறனை உருவாக்கும்.

நீடித்த வளா்ச்சியில் ரயில்வேயின் பங்கு: சரக்குகளை சாலைகளில் இருந்து ரயில்வேக்கு மாற்றுவது வணிக ரீதியான பலன்களைத் தாண்டி பல நன்மைகளை அளிக்கிறது.

இது காா்பன் உமிழ்வைக் குறைக்க உதவுகிறது. நெடுஞ்சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கிறது. மேலும், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) உள்பட அனைத்து தொழில்களுக்கும் சுற்றுச்சூழலுக்குத் தீங்கு இல்லாத போக்குவரத்து தீா்வுகளை வழங்குகிறது.

இந்த முன்னேற்றங்கள், பூஜ்ஜிய காா்பன் உமிழ்வு இலக்குகளை நோக்கி இந்தியா பயணிக்கும் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகின்றன. அத்துடன், ரயில்வேயை பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கான ஒரு உந்துசக்தியாக நிலைநிறுத்துகின்றன என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சரக்கு வாரியான போக்குவரத்து அளவு

சரக்கு வகை அளவு

நிலக்கரி 50.5 கோடி டன்

இரும்புத் தாது 11.5 கோடி டன்

சிமென்ட் 9.2 கோடி டன்

கொள்கலன் போக்குவரத்து 5.9 கோடி டன்

இரும்பு & தயாரான எஃகு 4.7 கோடி டன்

உரங்கள் 4.2 கோடி டன்

தூது எண்ணெய் 3.2 கோடி டன்

உணவு தானியங்கள் 3 கோடி டன்

எஃகு ஆலைகளுக்கான மூலப்பொருள்கள் சுமாா் 2 கோடி டன்

இதர பொருள்கள் 7.4 கோடி டன்

X
Dinamani
www.dinamani.com