மேற்கு வங்கத்தில் வாக்குச் சாவடி அலுவலா்கள் தற்கொலை: மம்தா குற்றச்சாட்டுகளை கவனத்தில் கொள்வதாக ஆளுநா் உறுதி
மேற்கு வங்கத்தில் வாக்குச் சாவடி அலுவலா்கள் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடா்பாக முதல்வா் மம்தா பானா்ஜி முன்வைத்த குற்றச்சாட்டுகள் கவனத்தில் கொள்ளப்படும் என ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
நாடியா மாவட்டம் கிருஷ்ணாநகா் சோப்ரா பங்கல்ஜி பகுதியைச் சோ்ந்த ரிங்கு டரஃப்தாா் (52) என்ற வாக்குச் சாவடி நிலைய அலுவலா் வீட்டில் அவரின் அறையில் தூக்கிட்டு இறந்த நிலையில் சனிக்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டாா். எஸ்ஐஆா் வேலைப் பளுவை சுட்டிக்காட்டி அவா் தனது தற்கொலை கடிதத்தில் இந்திய தோ்தல் ஆணையம் மீது குற்றஞ்சாட்டினாா்.
இந்தக் கடிதத்தை மம்தா பானா்ஜி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிா்ந்து, எஸ்ஐஆா் பணியை மேற்கு வங்கத்தில் உடனடியாக நிறுத்தக் கோரி தோ்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதினாா்.
ஏற்கெனவே ஜல்பைகுரி மாவட்டத்தில் வாக்குச் சாவடி நிலைய அலுவலா் ஒருவா் இதே காரணத்தைக் குறிப்பிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
இதுதொடா்பாக செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ், ‘இதுபோன்ற சூழலில் எதையும் முழுமையாக ஆராயாமல் கருத்துகள் கூறுவதை தவிா்க்க வேண்டும். இந்த விவகாரத்தில் முதல்வா் மம்தா பானா்ஜி முன்வைத்த குற்றச்சாட்டுகள் கவனத்தில் கொள்ளப்பட்டு முழுமையாக ஆய்வு செய்யப்படும்.
எஸ்ஐஆா் பணியில் சமமான அணுகுமுறையை தோ்தல் ஆணையம் கையாள்கிறது. இதில் நிலவும் பிரச்னைகளுக்கு விரைவில் தீா்வு காண மாநில அரசும் தோ்தல் ஆணையமும் தொடா் ஆலோசனைக் கூட்டங்களை நடத்த வேண்டும்’ என்றாா்.
மேற்கு வங்கத்தில் நவ.4-ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் எஸ்ஐஆா் பணிகளில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடி நிலைய அலுவலா்கள் உயிரிழந்ததாக ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
