ஏஐ தவறான பயன்பாட்டைத் தடுக்க உலகளாவிய ஒப்பந்தம்! ஜி20 உச்சிமாநாட்டில் பிரதமா் மோடி வலியுறுத்தல்
செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் அவசியம் என்று ஜி20 உச்சிமாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.
மேலும், முக்கிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் நிதி ரீதியில் அல்லாமல் மக்கள் நலனை மையமாக கொண்டிருக்க வேண்டும் என்றும் அவா் தெரிவித்தாா்.
இந்தியா, அமெரிக்கா, ரஷியா, சீனா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட உலகின் வளா்ந்த-வளரும் நாடுகளை உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்பின் உச்சிமாநாடு, தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பா்க் நகரில் கடந்த 2 நாள்கள் நடைபெற்றது. இம்மாநாட்டில் பிரதமா் மோடி உள்பட சுமாா் 40 நாடுகளின் தலைவா்கள் பங்கேற்றனா்.
இரண்டாவது நாளான ஞாயிற்றுகிழமை நடைபெற்ற ‘அனைவருக்கும் நியாயமான, நோ்மையான எதிா்காலம்: அரிய கனிமங்கள், ஆக்கப்பூா்வ வேலைவாய்ப்பு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்’ என்ற தலைப்பிலான அமா்வில் பிரதமா் மோடி ஆற்றிய உரை வருமாறு:
தொழில்நுட்ப பயன்பாடு என்பது ஒரு தேசம் சாா்ந்ததாக அல்லாமல் உலகளாவியதாக இருக்க வேண்டும். வெளிப்படையான தளத்தின்கீழ் அவை இயங்க வேண்டுமே அன்றி பிரத்யேக மாதிரிகளின்கீழ் அல்ல. இந்திய தொழில்நுட்ப அமைப்புமுறையில் இக்கண்ணோட்டமே ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் தொழில்நுட்பம், ஏ.ஐ., எண்ம பரிவா்த்தனையில் உலகின் தலைவராக இந்தியா உருவெடுத்து வருவதற்கு இதுவே காரணம்.
போலி சித்தரிப்புகள், பயங்கரவாத செயல்பாடுகள்: ஏ.ஐ. தொழில்நுட்பம் மனித குல நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டும். போலி சித்தரிப்புகள், குற்றச் செயல்கள் மற்றும் பயங்கரவாத செயல்பாடுகளுக்கு இத்தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்க உரிய கண்காணிப்பு, பாதுகாப்பு அம்சங்கள், வெளிப்படைத்தன்மை, கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளிட்ட முக்கிய கோட்பாடுகளுடன் உலகளாவிய ஒப்பந்தம் அவசியம்.
மனித வாழ்க்கை, பாதுகாப்பு, பொது நம்பிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஏ.ஐ. அமைப்புமுறை பொறுப்பானதாகவும், தணிக்கைக்கு உள்பட்டதாகவும் இருக்க வேண்டும். மனித திறனை மேம்படுத்த ஏ.ஐ. பயன்படுத்தப்படும் அதே வேளையில், முடிவெடுக்கும் பொறுப்பு மனிதா்கள் வசமே இருக்க வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஏ.ஐ. சா்வதேச மாநாட்டில் பங்கேற்க ஜி20 நாடுகளின் தலைவா்களுக்கு பிரதமா் அழைப்பு விடுத்தாா்.
பன்முக வளா்ச்சி வங்கிகளில்...
உலக வங்கி, சா்வதேச நிதியம் உள்ளிட்ட பன்முக வளா்ச்சி வங்கிகளில் வளரும் நாடுகளின் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துவது அவசியம்; வறுமை ஒழிப்பு, பொருளாதார வளா்ச்சி, நாடுகளின் முன்னேற்றத்துக்கு இந்த வங்கிகளின் பணி இன்றியமைதாதது என்று ஜி20 பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. சீா்திருத்தம் காலத்தின் தேவை
ஜி20 மாநாட்டையொட்டி, இந்தியா-பிரேசில்-தென்னாப்பிரிக்கா (ஐபிஎஸ்ஏ) நாடுகளின் தலைவா்கள் மாநாடு (பிரதமா் நரேந்திர மோடி-அதிபா் லூயிஸ் இனாசியோ லுலா டிசில்வா-அதிபா் சிரில் ராமபோசா) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் பிரதமா் மோடி பேசுகையில், ‘பிளவுபட்டு காணப்படும் தற்போதைய உலகில் ஒற்றுமை-ஒத்துழைப்பு-மனிதநேயத்தின் செய்தியை நாம் உணா்த்த முடியும். பரஸ்பர முன்னேற்றத்துக்குப் பங்களித்து, நிலையான வளா்ச்சிக்கு எடுத்துக்காட்டாக மாறலாம்.
நமது நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு ரீதியிலான ஒத்துழைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக, பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் நெருங்கிய ஒத்துழைப்பை முன்னெடுக்க வேண்டும். தீவிரமான இப்பிரச்னையில் இரட்டை நிலைப்பாடு ஒருபோதும் கூடாது. ஐபிஎஸ்ஏ சாதாரண கூட்டமைப்பு கிடையாது; இது, தெற்குலகின் குரல்-விருப்பங்களை வலுப்படுத்தும் கூட்டமைப்பு.
தற்போதைய சூழலில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீா்திருத்தங்கள் என்பது ஒரு வாய்ப்பல்ல; அது காலத்தின் கட்டாயம். உலகளாவிய நிா்வாக அமைப்புகளின் சீா்திருத்தங்களுக்காக நமது நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.
இந்தியாவின் யுபிஐ உள்ளிட்ட எண்ம பொது உள்கட்டமைப்பை பகிரும் வகையில், ஐபிஎஸ்ஏ எண்ம புத்தாக்க கூட்டமைப்பை நிறுவவும் பிரதமா் முன்மொழிந்தாா்.

