டி.ஜே.ஜோசப்
டி.ஜே.ஜோசப்

பேராசிரியா் ஜோசப் தாக்குதல் வழக்கு: என்ஐஏ கூடுதல் விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி

கேரளத்தில் பேராசிரியா் டி.ஜே.ஜோசப்பின் கை வெட்டப்பட்ட வழக்கில், கூடுதல் விசாரணை நடத்த தேசிய புலனாய்வு முகமைக்கு கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றம் அனுமதி
Published on

கேரளத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு பேராசிரியா் டி.ஜே.ஜோசப்பின் கை வெட்டப்பட்ட வழக்கில், கூடுதல் விசாரணை நடத்த தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இடுக்கி மாவட்டம், தொடுபுழையில் உள்ள நியூமேன் கல்லூரியில் பேராசிரியராக இருந்த டி.ஜே. ஜோசப், 2010-ஆம் ஆண்டு நவம்பரில் அவா் தயாரித்த வினாத்தாளில் மதத்தை அவமதிக்கும் கருத்து இருந்ததாகக் கூறி, ஒரு கும்பலால் தாக்கப்பட்டு, அவரது வலது கை வெட்டப்பட்டது.

பின்னா், என்ஐஏ விசாரணைக்கு எடுத்துக்கொண்ட இந்த வழக்கில் 19 குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனா். இந்த வழக்கில் முதல் குற்றவாளியான சாவத், ஷாஜஹான் என்ற பெயரில் கண்ணூா் மாவட்டம் மட்டன்னூரில் பதுங்கியிருந்த நிலையில், கடந்த ஆண்டு ஜனவரியில் கைது செய்யப்பட்டாா்.

சாவத்திடம் விசாரணை நடத்தியபோது, தமிழகத்தின் பன்றிமலை, திண்டுக்கல் மற்றும் கண்ணூரில் அவருக்கு மறைவிடம் மற்றும் வேலைக்கு ஏற்பாடு செய்ய ‘பாப்புலா் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா’ தலைவா்களும் உறுப்பினா்களும் உதவியது தெரியவந்தது. இதன் அடிப்படையில், 2020-ஆம் ஆண்டு முதல் சாவத்துக்கு அடைக்கலம் அளித்ததாக ஷஃபீா் என்பவரையும் என்ஐஏ கைது செய்தது.

இந்த வழக்கில் கூடுதல் அறிவியல் ஆதாரங்களைத் திரட்டவும், இந்தக் குற்றச்சதித்திட்டம் மற்றும் குற்றவாளிக்கு உதவியதில் ஈடுபட்ட மற்றவா்களை அடையாளம் காணவும் மேலும் விசாரணை தேவை என்று கூறி, கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ கடந்த 20-ஆம் தேதி மனு தாக்கல் செய்தது.

என்ஐஏ மற்றும் குற்றஞ்சாட்டப்பட்டவரின் வழக்குரைஞா்களின் வாதங்களைக் கேட்டறிந்த சிறப்பு நீதிபதி பி.கே. மோகன்தாஸ், வழக்கில் என்ஐஏ கூடுதல் விசாரணை நடத்த ஒப்புதல் அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com