தாய்ப்பாலில் யுரேனியம்! ஆபத்தில் 70% குழந்தைகள்!! - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

பிகாரில் தாய்மார்களின் தாய்ப்பாலில் யுரேனியம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது பற்றி...
Uranium found in breast milk of Bihar mothers: 70% of infants at potential risk
கோப்புப்படம்ENS
Published on
Updated on
2 min read

பிகாரில் உள்ள சில பகுதிகளில் பாலூட்டும் தாய்மார்களின் தாய்ப்பாலில் யுரேனியம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

டாக்டர் அருண் குமார், பேராசிரியர் அசோக் கோஷ் தலைமையிலான பாட்னாவின் மகாவீர் புற்றுநோய் மருத்துவமனை குழு மற்றும் டாக்டர் அசோக் சர்மா தலைமையிலான தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை குழு இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்வில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

2021 அக்டோபர் முதல் 2024 ஜூலை வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பிகார் மாநிலத்தில் உள்ள போஜ்பூர், சமஸ்திபூர், பெகுசாராய், ககாரியா, கதிஹார், நாளந்தா ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் 17-35 வயதுடைய 40 தாய்மார்களின் தாய்ப்பால் மாதிரியை ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்கு சேகரிக்கப்பட்ட அனைத்து தாய்மார்களின் தாய்ப்பாலிலும் யுரேனியம்(U238) இருப்பது கண்டறியப்பட்டது. இதன் செறிவு லிட்டருக்கு 0 முதல் 5.25 மைக்ரோகிராம் வரை இருந்தது. சராசரியாக ககாரியாவில் அதிகமாகவும் நாளந்தாவில் மிகக்குறைவாகவும் இருந்தது. இதனால் பிகாரில் உள்ள சுமார் 70% குழந்தைகள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்ப்பாலில் இருக்கும் யுரேனியத்தின் அடிப்படை மூலத்தை கண்டறியும் முயற்சியில் ஆய்வு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தாய்ப்பால் மூலமாக குழந்தைகளுக்கு புற்றுநோய், நரம்பியல் கோளாறுகள் போன்ற பிரச்னைகள் ஏற்படுவது கவலையளிக்கிறது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

தாய்ப்பாலில் யுரேனியம் கலந்திருப்பதற்குக் காரணம், பிகாரில் உள்ள சுற்றுச்சூழல் நிலைமைகள்தான்.

மக்கள் அதிகமாக நிலத்தடி நீரை குடிப்பது, ஆழ்துளை கிணறுகளில் உள்ள நீரை குடிப்பதற்கு பயன்படுத்துவது, தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் மற்றும் கழிவுகள் வெளியேற்றம், அதிகளவில் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு ஆகியவை.

இவை ஏற்கனவே உணவுச்சங்கிலியில் ஆர்சனிக், ஈயம்(காரீயம்), பாதரசம் ஆகியவை கலக்க வழிவகுத்துள்ள நிலையில் தற்போது யுரேனியம் கலந்துள்ளது.

குழந்தைகளின் உடலில் யுரேனியம் கலப்பதால் சிறுநீரக பாதிப்பு, நரம்பியல் குறைபாடு, அறிவாற்றலில் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்றும் எதிர்காலத்தில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

பிகாரில் தாய்மார்களின் தாய்ப்பாலில் யுரேனியம் இருந்தாலும் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை தொடர்ந்து கொடுக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். ஏனெனில் குழந்தைகளின் ஆரம்ப கால வளர்ச்சிக்கும் நோயெதிர்ப்பு சக்திக்கும் தாய்ப்பால் அவசியம் என்றும் மருத்துவரின் ஆலோசனையின்பேரில் மட்டுமே தாய்ப்பால் தருவதை நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர்.

மேலும் பிகாரில் ஆய்வு செய்யப்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் சோதனை மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.

உலக நாடுகளில் யுரேனியம்

சாதாரணமாக தண்ணீரில் யுரேனியத்தின் அளவு லிட்டருக்கு 50 மைக்ரோகிராம் வரை இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

இந்தியாவில் 18 மாநிலங்களில் உள்ள 151 மாவட்டங்களில் நிலத்தடி நீரில் யுரேனியம் இருப்பது ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளது.

உலகளவில், கனடா, அமெரிக்கா, பின்லாந்து, சுவீடன், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், சீனா, கொரியா, மங்கோலியா, பாகிஸ்தான், கீழ் மீகாங் டெல்டாவில் உள்ள பகுதிகளில் நீர் ஆதாரங்களில் யுரேனியம் கலந்துள்ளது.

Summary

Uranium found in breast milk of Bihar mothers: 70% of infants at potential risk

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com