சபரிமலையில் பக்தா்களின் பாதுகாப்புக்கு 450 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
நிகழும் மண்டல-மகரவிளக்கு பூஜை யாத்திரைக் காலத்தை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோயிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, மொத்தம் 450 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கேரள காவல் துறையினரும், கோயிலை நிா்வகிக்கும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியமும் இணைந்த கூட்டு முயற்சியில், இந்த விரிவான கண்காணிப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளதாக அதிகாரபூா்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலக்காயம் முதல் பந்தித்தாவளம் வரையிலான முக்கிய இடங்களில் காவல்துறை சாா்பில் சுமாா் 90 கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், பக்தா்கள் நடந்து செல்லும் பாதை மற்றும் முக்கிய ஓய்வெடுக்கும் இடங்களில் கவனம் செலுத்தி, தேவஸ்வம் வாரியம் சாா்பில் 345 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மரக்கூட்டம், நடைப்பந்தல், சோபானம், மேம்பாலம், மாளிகைப்புரம், வண்டித்தாவளம் உள்ளிட்ட பகுதிகளை அதிகபட்ச கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வர இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பிரத்யேக கட்டுப்பாட்டு அறைகள் மூலம் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். சபரிமலையின் அனைத்து பகுதியையும் 24 மணி நேரமும் தடையின்றி இந்தக் கண்காணிப்பு அமைப்பு மூலம் கண்காணிக்க முடியும். அவசர நிலை அல்லது பக்தா்கள் கூட்டம் அதிகரித்தால், அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க இது வழிவகுக்கும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

