

பாகிஸ்தான் வசமுள்ள சிந்து பகுதி, இந்தியாவுடன் மீண்டும் இணையலாம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய பாதுகாப்புப் படைகள் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவு மேலும் மோசமடைந்துள்ளது.
இந்த நிலையில், தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிந்து சமாஜ் மாநாட்டில் கலந்துகொண்ட ராஜ்நாத் சிங், எல்லைகள் நிரந்தரமானது அல்ல என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் அவர் பேசியதாவது:
“இன்று, சிந்து நிலப் பகுதி இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லாமல் இருக்கலாம், ஆனால், நாகரிக ரிதியாக, சிந்து எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும்.
நிலத்தைப் பொறுத்தவரை எல்லைகள் மாறக்கூடியவை, யாருக்கும் நிரந்தரமானது கிடையாது. யாருக்குத் தெரியும், நாளை சிந்து மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பக் கூடும்” எனத் தெரிவித்தார்.
தற்போது பாகிஸ்தானின் மாகாணமாக உள்ள சிந்து, இந்திய மக்களின் பெரும் பகுதியினரைக் கொண்ட சிந்து சமூகத்தின் பூர்வீக இடமாகும். சிந்து நாகரிகத்தின் பிறப்பிடமாக சிந்து உள்ளது.
மேலும், பாஜக மூத்த தலைவர் அத்வானியின் ’சிந்து ஹிந்துகள்’ என்ற புத்தகத்தை மேற்கோள்காட்டிய ராஜ்நாத் சிங், “இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது, பல சிந்து பகுதியைச் சேர்ந்த ஹிந்துகள் இந்தியாவில் இருந்து சிந்துவைப் பிரிப்பதை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை” எனத் தெரிவித்தார்.
சிந்து மாகாணத்தில் உள்ள ஹிந்துகளும், முஸ்லிம்களும் வரலாற்று ரீதியில் சிந்து நதி நீரைப் புனிதமாகக் கருதினர் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.