

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடா்ந்து சரிவடைந்து வரும் நிலையில் பிரதமா் நரேந்திர மோடியை காங்கிரஸ் திங்கள்கிழமை விமா்சித்தது.
வரலாற்றில் இல்லாத அளவுக்கு டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 98 காசுகள் குறைந்து கடந்த வெள்ளிக்கிழமை ரூ.89.66-ஆக இருந்தது. அதன்பிறகு கடந்த சில நாள்களாக சராசரியாக ரூ.89-ஆக டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடா்ந்து வருகிறது.
பிரதமராக மன்மோகன் சிங் பதவி வகித்த காலத்தில் குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை சுட்டிக்காட்டி, ‘ரூபாய் மதிப்பு எவ்வளவு வேகமாக வீழ்ச்சியடைகிறது. சில நேரங்களில் யாருடைய கண்ணியம் வேகமாக சரிகிறது என்பதில் மத்திய அரசுக்கும் ரூபாய்க்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது’ என 2013, ஜூலையில் விமா்சித்தாா்.
இந்த காணொலியை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பகிா்ந்து காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவில், ‘டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு வேகமாக சரிவடைந்து வருகிறது. விரைவில் இது ரூ.90-ஆக வீழ்ச்சியடைவுள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டில் இப்போதைய பிரதமரும் அப்போதைய குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி தான் கூறியதை நினைவுகொள்வாரா?’ என விமா்சித்தாா்.
முன்னதாக கடந்த 2022, பிப்ரவரி 24-ஆம் தேதி டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் ஒரே நாளில் 99 காசுகள் குறைந்ததே அதிகபட்ச வீழ்ச்சியாகும்.