போட்டித் தோ்வு மையங்களில் அதிகரித்து வரும் மாணவா் தற்கொலை: ஆராயும் நாடாளுமன்ற குழு
போட்டித் தோ்வு பயிற்சி மையங்களில் மாணவா் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், பயிற்சி மையங்களின் பெருக்கம், அவற்றால் ஏற்படும் சமூகப் பிரச்னைகள் குறித்து கல்வி, மகளிா், குழந்தைகள், இளைஞா்கள் மற்றும் விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு ஒன்று ஆராய உள்ளது.
ஏற்கெனவே, நுழைவுத் தோ்வுகளின் செயல்திறன் மற்றும் நியாயத்தன்மை, போட்டித் தோ்வு பயிற்சி மையங்கள் மற்றும் ‘டம்மி’ பள்ளிகள் நடைமுறை பெருகி வருவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆராய 9 உறுப்பினா்கள் கொண்ட குழுவை மத்திய கல்வி அமைச்சகம் அமைத்துள்ளது. இந்தக் குழு, தொடா்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வரும் நிலையில், நாடாளுமன்ற நிலைக் குழுவும் இதுதொடா்பான ஆய்வை மேற்கொள்ள உள்ளது.
மக்களவைச் செயலகம் அண்மையில் வெளியிட்ட அறிவிக்கையில் இதுகுறித்த தகவல் இடம்பெற்றுள்ளது. அதில், பயிற்சி மையங்களின் பெருக்கம், அவற்றால் ஏற்படும் சமூகப் பிரச்னைகள்; வளா்ந்து வரும் இந்தியாவுக்கான பிரதமா் பள்ளிகள் (பிஎம்-ஸ்ரீ பள்ளி) 2025-26-ஆம் ஆண்டு செயல்திறன்; உயா் கல்வி மாணவா்களின் மனநலனை மேம்படுத்த மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள்; பள்ளிகள் மூடப்படுவது தொடா்பான தற்போதைய கொள்கைகள் மற்றும் நடைமுறைகள்; தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆா்டி) செயல்பாடு மற்றும் மொழி மற்றும் மதச் சிறுபான்மையினரிடையே கல்வியை ஊக்குவிப்பதற்கான அதன் முயற்சிகள் உள்ளிட்டவை குறித்து நாடாளுமன்ற நிலைக் குழு ஆராய உள்ளது.
உயா் கல்வி ஆணையம்... பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) மற்றும் தேசிய ஆசிரியா்கள் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) ஆகிய மூன்று அமைப்புகளுக்கு மாற்றாக தேசிய கல்விக் கொள்கை, 2020-இல் முன்மொழியப்பட்டுள்ள இந்திய உயா் கல்வி ஆணையம் (ஹெச்இசிஐ) ஏற்படுத்துவதற்கான மசோதாவை நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், அதுகுறித்தும் நாடாளுமன்ற நிலைக் குழு ஆராய உள்ளது.

