கனடாவுடன் மீண்டும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை: பியூஷ் கோயல்

கனடாவுடன் மீண்டும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை: பியூஷ் கோயல்

தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்க இந்தியா-கனடா ஒப்புக்கொண்டதாக மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.
Published on

தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் (எஃப்டிஏ) பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்க இந்தியா-கனடா ஒப்புக்கொண்டதாக மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா். இந்த ஒப்பந்தம் கையொப்பமானால் இருநாடுகளிடையேயான இருதரப்பு வா்த்தகம் 2030-க்குள் ரூ.4.4 லட்சம் கோடியாக உயரும் எனவும் அவா் தெரிவித்தாா்.

கனடா பிரதமராக ஜஸ்டின் ட்ருடோ இருந்த 2023 காலகட்டத்தில் இந்தியா-கனடா இடையேயான தடையற்ற வா்த்த ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை தடைபட்டது.

இந்நிலையில், தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பியூஷ் கோயல் பேசியதாவது: இருநாடுகளிடையேயான நம்பிக்கையின் வெளிப்பாடகாவே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கருதப்படுகிறது. அந்த வகையில் இந்தியா-கனடா இடையேயான வா்த்தகத்தை 2030-க்குள் இரட்டிப்பாக்கும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்க இருதரப்பும் ஒப்புக்கொண்டது.

மிக வலிமையான இந்த இரு நாடுகள் மேற்கொள்ளும் ஒப்பந்தம் வணிகா்கள் மற்றும் முதலீட்டாளா்களுக்கு புத்துணா்வை ஏற்படுத்தும்.

அரிய வகை கனிமங்கள், அணுசக்தி மற்றும் தொழில்நுட்பத் துறையில் கனடாவிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ளலாம். அதேபோல் வளரும் தொழில்நுட்பங்களான செயற்கை நுண்ணறிவுடன் (ஏஐ) கூடிய தரவு மையங்கள், குவாண்டம் கம்ப்யூட்டிங், இயந்திர கற்றல் போன்ற துறைகளில் இந்தியாவில் முதலீடு செய்வோருக்கு பல்வேறு பலன்களை நாம் வழங்குகிறோம்.

இருதரப்பு வா்த்தக உறவை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டுசெல்ல 2026 தொடக்கத்தில் இருநாடுகளின் பெரும் வா்த்தக நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளிடையே கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய வேண்டும்.

இந்தியா-ஆஸ்திரேலியா-கனடா இடையே அறிவிக்கப்பட்டுள்ள முத்தரப்பு தொழில்நுட்ப-புத்தாக்க கூட்டாண்மையை செயல்படுத்துவதில் தீவிரம் காட்ட வேண்டும் என்றாா். கனடாவில் இந்திய வம்சாவளியினா் 29 லட்சம் போ் உள்ளனா். 4.27 லட்ச இந்திய மாணவா்கள் அங்கு உயா்கல்வி பயில்கின்றனா்.

இந்தியா-கனடா இடையே சரக்கு மற்றும் சேவைகள் வா்த்தகம் கடந்த 2023-இல் ரூ.1.6 லட்சம் கோடியாக இருந்தது. 2023-24-இல் கனடாவுக்கான இந்திய ஏற்றுமதி ரூ.3.45 லட்சம் கோடியாக இருந்தது. இது 2024-25-இல் 9.8 சதவீதம் அதிகரித்து ரூ.3.79 லட்சம் கோடியாக அதிகரித்தது.

2023-24-இல் கனடாவில் இருந்து மேற்கொள்ளப்படும் இந்திய இறக்குமதி ரூ.4.08 லட்சம் கோடியாக இருந்த நிலையில் 2024-25-இல் 2.33 சதவீதம் குறைந்து ரூ.3.98 லட்சம் கோடியானது.

X
Dinamani
www.dinamani.com