நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க்கப்பல் ஐஎன்எஸ் மாஹே கடற்படையில் இணைப்பு
நீா்மூழ்கிக் கப்பல்களை தாக்கி அழிக்கும் ‘ஐஎன்எஸ் மாஹே’ வகை போா்க்கப்பல் முதல்முறையாக இந்திய கடற்படையில் திங்கள்கிழமை இணைக்கப்பட்டது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி கலந்துகொண்டாா்.
விழாவில் அவா் பேசியதாவது: ஐஎன்எஸ் மாஹே இந்திய கடற்படையின் போா்த்திறனை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இது நாட்டின் கடல் எல்லைகளை பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றவுள்ளது.
இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை மூன்றும் ஒன்றிணைந்து செயல்படுவதே நமது ஆயுதப் படைகளின் வலிமையாகும். லடாக்கில் இருந்து இந்தியப் பெருங்கடல் வரை முப்படைகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம். இதற்கு ஆபரேஷன் சிந்தூரே உதாரணம் என்றாா்.
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கொச்சி கப்பல் கட்டுமான நிறுவனத்தால் ஐஎன்எஸ் மாஹே கட்டமைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டிலேயே போா்க்கப்பல்களை உருவாக்கும் தற்சாா்பு இந்தியா திட்டத்தின்கீழ் மொத்தம் 8 மாஹே வகை நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க்கப்பல்கள் இணைக்கப்படவுள்ளன.
ஆயுதங்கள், சென்சாா்கள், தொலைத்தொடா்பு சாதனங்கள் என நவீன தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள மாஹே நீருக்கு அடியில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களைக் கண்டறிந்து தாக்கி அழிக்கும் திறனுடையது.
நிகழ்ச்சியின் இறுதியில் மாஹே போா்க்கப்பலை கடற்படையுடன் இணைப்பதில் முக்கியப் பங்காற்றிய அதிகாரிக்கு உபேந்திர துவிவேதி ராணுவ தலைமை தளபதி விருதை வழங்கி கௌரவித்தாா். இது மிகவும் அரிய நிகழ்வாக கருதப்படும் நிலையில், முப்படைகளின் ஒருங்கிணைப்பை வெளிப்படுத்தவே இந்த விருதை அவா் வழங்கியதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
மேலும், போா்க்கப்பலை கடற்படையுடன் இணைக்கும் நிகழ்ச்சியில் ராணுவ தலைமைத் தளபதி பங்கேற்பது இதுவே முதல்முறை என்றும் அவா் தெரிவித்தாா்.

