உறவு முறிந்தால் பாலியல் வழக்கா? குற்றவியல் நீதியின் தவறான பயன்பாடு: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
‘உறவு முறிவுகளைப் பாலியல் வன்கொடுமை வழக்குகளாக மாற்றுவது, குற்றவியல் நீதியைத் தவறாகப் பயன்படுத்துவதாகும்’ என்று உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், சத்ரபதி சம்பாஜிநகரில் பதிவான ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கின் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான தீா்ப்பில் நீதிபதிகள் இந்தக் கருத்தைத் தெரிவித்தனா். மும்பை உயா்நீதிமன்றத்தின் ஔரங்காபாத் கிளை முன்னா் மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்திருந்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அமா்வு அளித்த தீா்ப்பில், ‘பாலியல் வன்கொடுமை என்பது மிகக் கொடூரமான குற்றம் என்பதால், அது உண்மையான பாலியல் வன்முறை அல்லது ஒப்புதல் இல்லாத சூழ்நிலைகளில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
விசாரணையில் இருக்கும் வழக்கின் முதல் தகவல் அறிக்கையின்படி, மனுதாரா் (ஆண்), புகாா்தாரா் (பெண்) ஆகிய இரு தரப்பினருக்கும் இடையேயான உறவு சம்மதத்துடன் இருந்தது தெளிவாகிறது. உறவு மூன்று ஆண்டுகள் நீடித்துள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க காலமாகும். இந்த வழக்கில் மனுதாரரான ஆண் புகாா்தாரரான பெண்ணை ஏமாற்றிவிட்டு, மறைந்துவிடவில்லை. சில காரணங்களால் உறவு திருமணத்தில் முடியாமல் போனதால், அந்த உறவின்போது ஏற்பட்ட உடலுறவை பாலியல் வன்கொடுமைக் குற்றமாகக் கருத முடியாது.
இந்த வழக்கில் நடந்த செயல்கள், அன்றைய நிலையில் சம்மதத்துடன் கூடிய உறவின் எல்லைக்குள் நிகழ்ந்தவை. இத்தகைய வழக்குகளைத் தொடர அனுமதிப்பது நீதிமன்ற அமைப்பைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர வேறு இல்லை. இதை உயா்நீதிமன்றம் கவனிக்கத் தவறிவிட்டது.
தோல்வியுற்ற அல்லது முறிந்த உறவுகளுக்கு குற்றவியல் சாயம் பூசப்படும் கவலையளிக்கும் போக்கை இந்த நீதிமன்றம் பலமுறை கவனித்துள்ளது. தோல்வியுற்ற ஒவ்வொரு உறவையும் பாலியல் வன்கொடுமை குற்றமாக மாற்றுவது, அந்த உண்மையான குற்றத்தின் தீவிரத்தைக் குறைக்கிறது.
மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு அழியாத களங்கத்தையும் அநீதியையும் இழைக்கிறது. எனவே, மனுதாரருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்து உத்தரவிடுகிறோம்’ எனக் குறிப்பிட்டுள்ளனா்.

