சரணடைவதற்கான முடிவை எடுக்க அவகாசம்: 3 மாநில முதல்வா்களுக்கு மாவோயிஸ்டுகள் கடிதம்
மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் உள்ள மாவோயிஸ்டுகள் சரணடைவது குறித்து கூட்டாக முடிவு எடுக்க வசதியாக, அடுத்த ஆண்டு பிப்.15-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்க வேண்டும் என்று அந்த மாநிலங்களின் முதல்வா்களுக்கு மாவோயிஸ்டுகளின் மகாராஷ்டிரம்-மத்திய பிரதேசம்-சத்தீஸ்கா் சிறப்பு மண்டல குழு (எம்எம்சி) கடிதம் எழுதியுள்ளது.
அந்தக் கடிதத்தில், ‘எங்கள் ஆயுதங்களை ஒப்படைக்கவும், எங்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் அரசின் திட்டத்தில் சேரவும் முடிவு எடுக்க பிப்.15 வரை அவகாசம் வேண்டும். அதுவரை எங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.
தலைமறைவாகச் செயல்படும் எங்களுக்கு இடையே தொடா்புகொள்ள வேகமான, பாதுகாப்பான தொலைத்தொடா்பு வசதி இல்லை. ஒருவரை ஒருவா் தொடா்புகொள்வதற்கு வேகமான வழிமுறை இல்லாததால், பிப்.15 வரை அவகாசம் அளிப்பது அவசியமாகும். எனினும் இந்த அவகாசம் அடுத்த ஆண்டு மாா்ச் 31-க்குள் மாவோயிஸ்டுகளை முழுமையாக ஒழிக்க மத்திய அரசு விதித்துள்ள காலக்கெடுவுக்குள்தான் உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுதங்களைக் கைவிட்டு ஏற்கெனவே சரணடைந்துவிட்ட மாவோயிஸ்டுகளுக்கு இந்தக் கோரிக்கையில் உடன்பாடு உள்ளது என்றும் ஊடகத்துக்கு வெளியிடப்பட்ட அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பஸ்தா் சரக காவல் துறை ஐஜி பி.சுந்தர்ராஜ் கூறுகையில், ‘ஏற்கெனவே ஏராளமான மாவோயிஸ்டுகள் ஒழிக்கப்பட்டுள்ளனா். எஞ்சிய மாவோயிஸ்டுகளுக்கு சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை’ என்றாா்.
