

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மக்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் 450 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கேரளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்வதற்காக வருகை தருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்களின் வசதிக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் தேவசம்போர்டு வாரியம் பல்வேறு முன்னேற்பாடுகளைச் செய்து வருகிறது.
அந்தவகையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் 450 சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது உள்பட விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை, சன்னதியை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள காவல்துறை மற்றும் தேவசம் போர்டு கட்டுப்பாட்டு அறைகள் மூலம் கண்காணிப்பை நிர்வகித்து வருகின்றது. இந்த அமைப்பு சபரிமலையின் ஒவ்வொரு மூலையிலும் 24 மணி நேரமும், தடையின்றி கண்காணிப்பை உறுதி செய்கிறது. மேலும் ஏதேனும் அவசரநிலை அல்லது கூட்டம் அதிகரித்தால் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க இது உதவுகிறது.
சாலக்காயம் முதல் பண்டிதவளம் வரையிலான முக்கிய இடங்களை உள்ளடக்கிய சுமார் 90 கேமராக்கள் காவல்துறையினரால் நிறுவப்பட்டுள்ளன. மேலும் யாத்திரைப் பாதை மற்றும் முக்கிய ஓய்வுப் பகுதிகளை மையமாகக் கொண்டு வாரியத்தால் 345 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மரக்கூட்டம், நடப்பந்தல், சோபனம், மேம்பாலம், மாலிகாபுரம் மற்றும் பண்டிதவளம் உள்ளிட்ட அதிகபட்ச பகுதிகளைக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வர இந்த கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்பின் மூலம், அதிகாரிகள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கவும், தேவைப்படும் போதெல்லாம் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடியும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.