மேற்கு வங்கத்தில் 37 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த மகன், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) நடவடிக்கை மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
பிகாரைத் தொடர்ந்து, தமிழகம், மேற்கு வங்கம் உள்பட 12 மாநிலங்களில் எஸ்ஐஆர் நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எஸ்ஐஆர் நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலம், புருலியா மாவட்டம், கோபோரண்டா கிராமத்தைச் சேர்ந்த சக்ரவர்த்தி என்பவரின் மூத்த மகன் விவேக் சக்ரவர்த்தி, கடந்த 1988 ஆம் ஆண்டு குடும்பத்தைவிட்டு பிரிந்து சென்றார்.
பல ஆண்டுகள் விவேக்கை குடும்பத்தினர் தேடியும் அவர் கிடைக்காத நிலையில், அவரின் நிலை அறியாமல் கடந்த 38 ஆண்டுகளாக குடும்பத்தினர் துக்கத்தில் ஆழ்ந்திருந்தனர்.
தற்போது எஸ்ஐஆர் செயல்முறைகள் மூலம் விவேக் சக்ரவர்த்தி அவரது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்துள்ள அதிசயம் நடந்துள்ளது.
விவேக் குடும்பத்துடன் இணைந்தது எப்படி?
சக்ரவர்த்தியின் இளைய மகன் பிரதீப் சக்ரவர்த்தி, புருலியாவில் அவர்கள் வசிக்கும் கிராமத்தின் பூத் அதிகாரியாக (பிஎல்ஓ) பணிபுரிகிறார். எஸ்ஐஆர் படிவத்தில் அவரின் பெயரும் தொலைபேசி எண்ணும் அச்சிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கொல்கத்தாவில் வசித்துவந்த விவேக், அவர் சொந்த ஊரின் பூத் அதிகாரியான பிரதீப்பின் எண்ணை இணையத்தில் இருந்து எடுத்து, அவரை தொடர்பு கொண்டு படிவத்தை நிரப்புவது தொடர்பான உதவியைக் கோரியுள்ளார்.
படிவத்தில் உள்ள குடும்ப வரலாற்றை பூர்த்தி செய்யும்போது தொலைந்துபோன தனது சகோதரர்தான் விவேக் என்பதை பிரதீப் கண்டுபிடித்துள்ளார்.
இந்த எதிர்பாராத உணர்ச்சிகரமான திருப்பத்தை தொடர்ந்து, தனது பெற்றோர்களை விவேக்குடன் பேசவைத்துள்ளார் பிரதீப். 38 ஆண்டுகளுக்குப் பிறகு பெற்றோருடனும் உறவினர்களுடன் கலந்துரையாடிய விவேக், அவர்களை விரைவில் நேரில் பார்க்கவுள்ளார்.
இதுகுறித்து பிரதீப் சக்ரவர்த்தி கூறியதாவது:
“என் மூத்த சகோதரரை கடைசியாக 1988 ஆம் ஆண்டில்தான் பார்த்தேன். அதன்பிறகு அவர் வீட்டைவிட்டு வெளியேறினார். அனைத்து பகுதிகளிலும் தேடினோம். ஆனால், உறவினர்களுடனான தொடர்பை அவர் முற்றிலுமாக துண்டித்துவிட்டார்.
தற்போது எஸ்ஐஆர் செயல்முறைக்கு உதவிகோரி அவர் என்னை அழைத்தபோது, அவரின் பதில்கள் எங்கள் குடும்பத்துடன் தொடர்புபடுத்தியது. பின், நான் சொந்த சகோதரருடன் பேசுவதை உணர்ந்தேன்.” என்றார்.
எஸ்ஐஆர் செயல்முறை இல்லையென்றால் எனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்திருக்க முடியாது, தேர்தல் ஆணையத்துக்கு நன்றி என்று விவேக் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.