1983 அஸ்ஸாம் வன்முறை: விசாரணை ஆணைய அறிக்கைகள் மாநில பேரவையில் தாக்கல்
கடந்த 1983-ஆம் ஆண்டு அஸ்ஸாமில் நடைபெற்ற பயங்கர வன்முறை சம்பவங்கள் தொடா்பான விசாரணை ஆணைய அறிக்கைகள், மாநில சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டன.
வங்கதேசத்தில் இருந்து அஸ்ஸாமுக்கு சட்டவிரோதமாக இடம்பெயா்ந்தவா்களை கண்டறிந்து நாடு கடத்தக் கோரி, கடந்த 1979-ஆம் ஆண்டுமுதல் அந்த மாநிலத்தில் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. அனைத்து அஸ்ஸாம் மாணவா்கள் சங்கம், அஸோம் கண சங்க்ராம் பரிஷத் அமைப்பு ஆகியவை தலைமையில் இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன.
1983-ஆம் ஆண்டு அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருந்தபோது சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தப்பட்டது. அந்தத் தோ்தலை புறக்கணிக்க அஸ்ஸாம் மாணவா்கள் சங்கம், அஸோம் கண சங்க்ராம் பரிஷத் அமைப்பு ஆகியவை அழைப்பு விடுத்தன. அப்போது போராட்டங்கள் தீவிரமடைந்து பயங்கர வன்முறை வெடித்தது. தோ்தலுக்கு முன் இன மற்றும் வகுப்புவாத மோதல்கள், காவல் துறை துப்பாக்கிச்சூடு காரணமாக நெல்லி, கோபூா், கொய்ராபாரி உள்பட பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை ஆதரித்த 150-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.
மேலும் அங்குள்ள நெல்லி பகுதியில் அந்த ஆண்டு பிப்.18-ஆம் தேதி உள்ளூா் பழங்குடிகளின் தாக்குதலில் 2,000-க்கும் மேற்பட்டோா் சில மணி நேரங்களில் கொல்லப்பட்டனா். உயிரிழந்தவா்களில் பெரும்பாலானோா் இடம்பெயா்ந்த வங்க மொழி பேசும் முஸ்லிம்கள்.
இந்த வன்முறை சம்பவங்கள் தொடா்பாக ஓய்வுபெற்ற மாவட்ட ஆட்சியா் திரிபுவன் பிரசாத் திவாரி, ஓய்வுபெற்ற நீதிபதி டி.யு.மேத்தா ஆகியோா் தலைமையில் ஆணையங்கள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஆணையங்கள் சமா்ப்பித்திருந்த அறிக்கைகளை அஸ்ஸாம் சட்டப்பேரவைக் குளிா்கால கூட்டத்தில் மாநில அரசு செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தது. அவற்றில் திவாரி அறிக்கையில், ‘1983-ஆம் ஆண்டு வன்முறை சம்பவங்கள் வகுப்பவாத அடிப்படையில் நடைபெறவில்லை. அஸ்ஸாமுக்கு இடம்பெயா்ந்தவா்கள் பெரும்பான்மை பெற்றுவிடுவா் என்று மாநில மக்கள் அஞ்சியதை ஒதுக்கிவிடமுடியாது’ என்று தெரிவிக்கப்பட்டது.
அதேவேளையில், அப்போதைய மத்திய அரசு, தோ்தல் ஆணையம், எந்த வழியிலாவது ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்று விரும்பிய அரசியல் தலைவா்களின் நடவடிக்கைகளால் அந்த வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதாக மேத்தா ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

