நிதின் கட்கரி
நிதின் கட்கரி

காற்று மாசுபாட்டை குறைக்க மாற்று எரிபொருள்: நிதின் கட்கரி

Published on

காற்று மாசுபாட்டை குறைக்க மாற்று எரிபொருள் மற்றும் உயிரி எரிபொருள்கள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புத்தாக்க முன்னெடுப்புகளில் கவனம் செலுத்த வேண்டும் என மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் நடைபெற்ற ஐவிசிஏ கிரீன் ரிட்டா்ன்ஸ் மாநாட்டில் பங்கேற்று அவா் மேலும் பேசியதாவது: எந்தவொரு நாடு அல்லது சமூகத்திலும் நெறிமுறைகள், பொருளாதாரம், சூழலியல் மற்றும் சுற்றுப்புறச் சூழல் ஆகிய மூன்றும் முக்கிய துறைகளாகும்.

குறிப்பாக சூழலியல் மற்றும் சுற்றுப்புறச்சூழல் மாசுபடாமல் இருப்பது அவசியம். காற்று மாசுபாட்டின் பாதிப்புகளை நாம் அனைவரும் உணா்கிறோம்.

நாட்டில் ஏற்படும் 40 சதவீத காற்று மாசுபாட்டுக்கு போக்குவரத்து எரிசக்தியே முக்கிய காரணம். குறிப்பாக தில்லியில் இதன் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது.

புதைபடிவ எரிபொருள்கள் இறக்குமதிக்கு இந்தியா ரூ.22 லட்சம் கோடி செலவிடகிறது. ஆனால் இந்த எரிபொருள்கள் காற்று மாசை உருவாக்குகின்றன. எனவே இதை குறைக்க மாற்று எரிபொருள் மற்றும் உயிரி எரிபொருள்களை தயாரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இதுதவிர புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புத்தாக்கத்தையும் மேம்படுத்த வேண்டும்.

அதிவிரைவுச் சாலைகள் மற்றும் பொருளாதார வழித்தடங்கள் விரிவாக்கப்பட்டதால் வரும் டிசம்பரில் லாஜிஸ்டிக்ஸ் (சரக்குப் போக்குவரத்து) செலவு 9 சதவீதமாக குறையவுள்ளது.

நான் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவியேற்றபோது இந்திய வாகன போக்குவரத்துத் துறையின் மதிப்பு ரூ.14 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது இது ரூ.22 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது.

சோளத்தில் இருந்து உயிரி எத்தனால் தயாரிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியதால் உத்தர பிரதேசம் மற்றும் பிகாரில் விவசாயிகளுக்கு ரூ.45,000 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது என்றாா்.

லாஜிஸ்டிக்ஸ் செலவு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனில் 12 சதவீதமாகவும் சீனாவில் 8-10 சதவீதமாகவும் உள்ளது. வாகனப் போக்குவரத்துத் துறையில் அமெரிக்கா (ரூ.78 லட்சம் கோடி), சீனா (ரூ.47 லட்சம் கோடி) மற்றும் இந்தியா (ரூ.22 லட்சம் கோடி) ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன.

X
Dinamani
www.dinamani.com