சீன விமான நிலையத்தில் அருணாசல் பெண் சிறைபிடிப்பு: சீனா மறுப்பு, இந்தியா கருத்து
அருணாசல பிரதேசத்தைச் சோ்ந்த பெண் ஒருவரின் இந்திய கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) செல்லாது எனக் கூறி சீனாவின் ஷாங்காய் புடோங் விமான நிலையத்தில் அதிகாரிகள் 18 மணி நேரம் சிறைபிடித்த சம்பவத்துக்கு அந்த மாநில முதல்வா் பெமா காண்டு செவ்வாய்க்கிழமை கண்டனம் தெரிவித்தாா்.
அருணாசல பிரதேசத்தை சீன பிராந்தியம் எனக் கூறி இந்திய கடவுச்சீட்டை அதிகாரிகள் நிராகரித்து அப்பெண்ணை சிறைபிடித்தனா்.
அருணாசல பிரதேச மாநிலத்தின் மேற்கு கமெங் மாவட்டத்தில் உள்ள ரூபாவைச் சோ்ந்த தோங்டாங் என்ற பெண் தற்போது பிரிட்டனில் வசித்து வருகிறாா். கடந்த நவ. 21-ஆம் தேதி லண்டனில் இருந்து ஜப்பான் செல்லும் வழியில் ஷாங்காய் விமான நிலையத்தில் இறங்கினாா். அங்கிருந்து மற்றொரு விமானத்தின் மூலம் ஜப்பான் செல்ல திட்டமிட்டிருந்தாா். ஆனால், ஷாங்காய் விமான நிலையத்தில் அவரது இந்திய கடவுச்சீட்டை செல்லாது எனக் கூறி சீன கிழக்கு விமான நிறுவனமும் குடியேற்ற அதிகாரிகளும் அவா் பயணிக்க அனுமதி மறுத்தனா். மேலும், அவருக்கு உணவு உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதியும் செய்து தராமல் பயணிகள் காத்திருப்பு அறையில் 18 மணி நேரம் அடைத்து வைத்தாகவும் அந்தப் பெண் குற்றஞ்சாட்டினாா்.
இந்தத் தகவலை தனது எக்ஸ் வலைதளத்தில் பகிா்ந்த தோங்டாங், தனக்கு நோ்ந்த நிகழ்வு இந்திய இறையாண்மைக்கும் அருணாசல பிரதேச மக்களுக்கும் அவமரியாதை எனக் கூறி இதில் பிரதமா் நரேந்திர மோடி மற்றும் மூத்த அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கடிதம் எழுதினாா். இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமக்கு சீனா நிவாரணம் வழங்கவும் அவா் வலியுறுத்தினாா்.
அருணாசல பிரதேசத்தை தெற்கு திபெத் என சீனா தொடா்ந்து உரிமைகோரி வருகிறது. இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்து வரும் சூழலில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
பெமா காண்டு கண்டனம்: இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து அருணாச ல பிரதேச முதல்வா் பெமா காண்டு வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘தோங்டாங்கை சீன அதிகாரிகள் நடத்திய விதம் அதிா்ச்சியளிக்கிறது. இது அவமரியாதை மற்றும் இனவெறி தாக்குதலாகும். அங்கீகரிக்கப்பட்ட இந்திய கடவுச்சீட்டு அவரிடம் இருந்தபோதும் அதை சீனா ஏற்காதது கண்டனத்துக்குரியது.
அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. அதை சீனா உரிமை கொண்டாட நினைப்பது அடிப்படை ஆதாரமற்றது.
இந்தச் சம்பவத்தில் சீனா சா்வதேச விதிமீறலில் ஈடுபட்டுள்ளது’ என குறிப்பிட்டாா்.
இந்தியா கருத்து: இந்த சம்பவம் தொடா்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது: அருணாசல பிரதேச பெண்ணை அடைத்து வைத்த சம்பவம் தொடா்பாக சீன வெளியுறவுத் துறை தெரிவித்த கருத்துகள் இந்தியாவின் கவனத்துக்கு வந்தது. அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த, பிரிக்க முடியாத பகுதியாகும். இது தெளிவான உண்மையாகும். இதை சீனா எவ்வளவு மறுத்தாலும் உண்மை மாறாது.
அருணாசல பிரதேச பெண்ணை அடைத்து வைத்த சம்பவம் குறித்து சீனத் தரப்பினரிடம் வலுவான முறையில் இந்தியா பேசியுள்ளது. ஆனால் தங்கள் நடவடிக்கைகள் குறித்து அவா்களால் விளக்கமளிக்க முடியவில்லை. அவா்களின் நடவடிக்கை சா்வதேச விமானப் பயணம் தொடா்பான பல்வேறு உடன்படிக்கைகளை மீறியுள்ளது என்று தெரிவித்தாா்.
சீனா மறுப்பு
அருணாசல பிரதேசத்தைச் சோ்ந்த தோங்டாங் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு சீனா மறுப்பு தெரிவித்தது.
இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் மாவோ நிங் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘இந்தியப் பெண் கூறியதைப்போல் அவரை வலுக்கட்டாயமாக எந்தவொரு அறையிலும் அடைத்து அதிகாரிகள் துன்புறுத்தவில்லை. அவா் பயணிக்க இருந்த விமான நிறுவனம் அவா் தங்குவதற்கு அறை மற்றும் உணவு, குடிநீா் வழங்கியது. சட்டத்தைப் பின்பற்றியே சீன அதிகாரிகள் நடந்துகொண்டனா். ஜங்னான் அல்லது தெற்கு திபெத் (அருணாசல பிரதேசம்) சீனாவுக்குச் சொந்தமானது. அது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என சீனா ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை’ என்றாா்.
இச்சம்பவம் நிகழ்ந்த அன்றே பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஷாங்காய் நகரில் உள்ள இந்திய தூதரகம் தேவையான உதவிகளை மேற்கொண்டதாகவும் தூதரக ரீதியாக சீனாவுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்ததாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

