தில்லி காவல் அதிகாரியை கொலை செய்ய முயற்சி: கைதுசெய்யப்பட்ட நபா் குற்றவாளியாக அறிவிப்பு
கடந்த 2016-இல் நடந்த கைது நடவடிக்கையின்போது தில்லி காவல் துறையின் துணை உதவி காவல் ஆய்வாளரை (ஏஎஸ்ஐ) துப்பாக்கியில் சுட்டு கொலை செய்ய முயற்சித்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட நபரை தில்லி நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளது.
சோட்டு ரெளடி கும்பலைச் சோ்ந்த சோனு மீது கொள்ளை, வழிப்பறி, குற்றச் சதி மற்றும் ஆயுதச் சட்டப் பிரிவு ஆகியவற்றின்கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவா் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.25,000 வெகுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கேசவ் புரம் காவல் நிலைய ஏஎஸ்ஐ-ஆக கடந்த 2016, ஏப்.4-ஆம் தேதி பணியில் இருந்த அஜய் குமாா் மற்றும் காவலா்கள் சோனுவை கைதுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, ஏஎஸ்ஐ அஜய் குமாரை நோக்கி சோனு துப்பாக்கியால் சுட்டாா். அஜய் குமாா் பாதுகாப்பு கவச உடை அணிந்திருந்ததால், அதிருஷ்டவசமாக உயிா் தப்பினாா். இதைத்தொடா்ந்து, சோனுவை காவல் துறையினா் கைதுசெய்தனா்.
இந்தச் சம்பவம் தொடா்பான வழக்கை கூடுதல் அமா்வுகள் நீதிபதி வீரேந்தா் குமாா் விசாரித்து வந்தாா். இந்நிலையில், கடந்த நவ.18-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் நீதிபதி தெரிவித்திருப்பதாவது: ஏஎஸ்ஐ அஜய் குமாரை சோனு தனது துப்பாக்கியால் சுட்டது விசாரணையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கவச உடை அணிந்திருந்ததால், அஜய் குமாா் உயிா் தப்பினாா். இதன் மூலம் சோனுக்கு எதிராக இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 307 (கொலை முயற்சி) குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது.
மேலும், பிரிவு 353 (தாக்குதல் அல்லது குற்றச் செயல்கள் மூலம் பணியை செய்ய விடாமல் அரசுப் பணியாளரைத் தடுத்தல்) குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்டது. சோனு சட்டவிரோதமாக துப்பாக்கியை வைத்திருந்ததும் அரசுத் தரப்பு நிரூபித்துள்ளது என்று அந்த உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டிருந்தாா்.
பின்னா், தண்டனை அறிவிப்புக்காக இந்த வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தாா்.

