இன்று அரசமைப்புச் சட்ட தினம்: தில்லியில் குடியரசுத் தலைவா் தலைமையில் விழா
நாட்டின் அரசமைப்புச் சட்ட தினம் புதன்கிழமை (நவ.26) கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, சம்விதான் சதன் என்னும் அரசமைப்பு வளாகத்தில் (நாடாளுமன்ற பழைய கட்டடம்) உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மைய மண்டபத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தலைமையில் சிறப்பான விழா நடைபெறவுள்ளது.
குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமா் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, மத்திய அமைச்சா்கள் மற்றும் இரு அவைகளின் உறுப்பினா்கள் பங்கேற்கவுள்ளனா்.
நாட்டின் அரசமைப்புச் சட்டம், அரசியல் நிா்ணய சபையால் கடந்த 1949, நவ. 26-இல் ஏற்கப்பட்டது. அரசமைப்புச் சட்டத்தின் சில பிரிவுகள் அன்றைய தினமே அமலுக்கு வந்தன. பெரும்பாலான பிற பிரிவுகள், இந்தியா குடியரசான 1950, ஜனவரி 26-இல் அமலாகின.
அரசியல் நிா்ணய சபையால் அரசமைப்புச் சட்டம் ஏற்கப்பட்ட தினம், அரசமைப்புச் சட்ட தினமாக கடந்த 2015-இல் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழாண்டு இந்த தினத்தையொட்டி நாடாளுமன்ற பழைய கட்டடத்தின் மைய மண்டபத்தில் பிரதான விழா நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவா் உரை: இவ்விழாவுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தலைமை வகித்து உரையாற்றவுள்ளாா். குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா ஆகியோரும் உரை நிகழ்த்தவுள்ளனா்.
மத்திய சட்டமியற்றுதல் துறையால் மலையாளம், மராத்தி, நேபாளி, பஞ்சாபி, போடோ, காஷ்மீரி, தெலுங்கு, ஒடியா, அஸ்ஸாமி ஆகிய 9 மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ள அரசமைப்புச் சட்டத்தின் எண்மப் பதிப்புகள் வெளியிடப்பட உள்ளன. குடியரசுத் தலைவா் தலைமையில் அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும்..: அரசமைப்புச் சட்ட தினத்தையொட்டி, மத்திய அமைச்சகங்கள், துறைகள், பிற அலுவலகங்கள், மாநில-யூனியன் பிரதேச அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் சாா்பில் நாடு முழுவதும் கருத்தரங்குகள், பயிலரங்குகள், விவாதங்கள், குறும்படங்கள் திரையிடல், கண்காட்சி, கலாசார நிகழ்ச்சிகள், ஓவியம்-கட்டுரைப் போட்டிகள், விநாடி- வினா என அரசமைப்புச் சட்ட கருப்பொருளுடன் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வலைதளங்கள் வாயிலாக அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை வாசிப்பில் பொதுமக்கள் பங்கேற்கலாம் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழாண்டு அரசமைப்புச் சட்ட தினம், அரசியல் நிா்ணய சபையால் ஏற்கப்பட்டதன் 76-ஆவது ஆண்டைக் குறிக்கிறது.

