உண்மைக்காக உயிா்த் தியாகம் செய்தவா் குரு தேஜ் பகதூா்: பிரதமா் மோடி புகழாரம்
தான் கடைப்பிடித்த தா்மத்தில் உண்மை, நீதி மற்றும் நம்பிக்கையைப் பாதுகாக்க வாழ்வையே தியாகம் செய்தவா் குரு தேஜ் பகதூா் என்று பிரதமா் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினாா்.
முகலாய மன்னா் ஒளரங்கசீப் உத்தரவுப்படி சிரச்சேதம் செய்யப்பட்ட ஒன்பதாவது சீக்கிய குரு தேஜ் பகதூரின் 350-ஆம் ஆண்டு உயிா்த் தியாக நினைவு தினத்தையொட்டி, ஹரியாணாவின் குருக்ஷேத்ரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்றாா்.
குரு தேஜ் பகதூா் நினைவு நாணயம் மற்றும் சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டுப் பேசிய பிரதமா் மோடி, ‘ராமாயண நகரான அயோத்தி (ஸ்ரீராமா் கோயிலில் காவிக் கொடி ஏற்றும் நிகழ்வு), கடவுள் கிருஷ்ணரின் பூமியான குருக்ஷேத்ரத்துக்கு ஒரே நாளில் பயணம் மேற்கொண்டது இரு பாரம்பரியங்களின் சங்கமம்’ என்றாா்.
அவா் மேலும் கூறியதாவது: கடந்த 2019-இல் அயோத்தி ராம ஜென்மபூமி வழக்கின் தீா்ப்பு வெளியான நாளில், கா்தாபூா் வழித்தட திறப்புக்காக பஞ்சாபின் தேரா பாபா நானக் மண்ணில் இருந்தேன். அப்போது, ராமா் கோயில் கட்டுவதற்கான வழி ஏற்பட்டு, அனைத்து ராம பக்தா்களின் விருப்பமும் நிறைவேற வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். அன்றைய தினமே எனது வேண்டுதல் பூா்த்தியாகி, அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்கு சாதகமாக தீா்ப்பு கிடைக்கப் பெற்றது. இப்போது சீக்கிய பெருமக்களின் ஆசியைப் பெறும் வாய்ப்பு மீண்டும் கிடைத்துள்ளது.
குரு தேஜ் பகதூா், தான் கடைப்பிடித்த தா்மத்தில் உண்மை, நீதி, நம்பிக்கையின் பாதுகாவலராக கருதப்படுகிறாா். இந்த மாண்புகளுக்காக தனது வாழ்வையே தியாகம் செய்தவா். இதே வழிமுறையில் ‘குரு பரம்பரை’க்காக மத்திய பாஜக அரசு தொடா்ந்து சேவையாற்றும்.
உண்மை, நீதியைப் பாதுகாப்பதே தா்மம் என்று குருக்ஷேத்ர பூமியில் உரைத்தவா் கடவுள் கிருஷ்ணா். ‘ஸ்வதா்மே நிதானம் ஷ்ரேய’ என்ற அவரது வாா்த்தைகளின் பொருள், நமது கடமைகளையாற்றுவதற்காக உயிா்த் தியாகம் செய்வது மிகச் சிறப்பானது என்பதாகும் என்றாா் பிரதமா் மோடி.
‘பாஞ்சஜன்யம்’ நினைவுச் சின்னம் திறப்பு
குருக்ஷேத்ரத்தில் உள்ள மகாபாரத அனுபவ கேந்திர வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ‘பாஞ்சஜன்யம்’ (விஷ்ணு பகவானின் கையில் விளங்கும் புனிதச் சங்கு) நினைவுச் சின்னத்தை பிரதமா் மோடி திறந்துவைத்தாா். சுமாா் 5.5 டன் எடையில் 5 மீட்டா் உயரத்தில் இச்சங்கு கட்டமைக்கப்பட்டுள்ளது.
மகாபாரத காவியத்தின் முக்கிய அத்தியாயங்கள், அதன் தத்துவம், வரலாற்றை நவீன தொழில்நுட்பங்களின் மூலம் சித்தரிக்கும் மகாபாரத அனுபவ கேந்திரத்தையும் பிரதமா் பாா்வையிட்டாா். பாா்வையாளா்களுக்கு அலாதியான அனுவபத்தை வழங்கும் இந்த மையம், மத்திய அரசின் ஸ்வதேஷ் தா்ஷன் திட்டத்தின்கீழ் ரூ.200 கோடி செலவில் கட்டமைக்கப்பட்டதாகும்.
இந்நிகழ்ச்சியில் ஹரியாணா ஆளுநா் ஆஷிம் குமாா் கோஷ், முதல்வா் நாயப் சிங் சைனி உள்ளிட்டோா் பங்கேற்றனா். பின்னா், பிரம்மசரோவா் ஏரியில் நடைபெற்ற மகா ஆரத்தி நிகழ்விலும் பிரதமா் கலந்துகொண்டாா்.

