உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்கோப்புப் படம்

வெறுப்புப் பேச்சு: ஒவ்வொரு சம்பவத்தை கண்காணிக்கவும், சட்டம் இயற்றவும் இயலாது - உச்சநீதிமன்றம்

Published on

வெறுப்புப் பேச்சுகளைக் கண்காணிக்க நாடு முழுவதும் காவல் நிலையங்களும், நீதிமன்றங்களும் உள்ளதால், ஒவ்வொரு சம்பவத்தைக் கண்காணிக்கவும், எதிராக சட்டம் இயற்றவும் இயலாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

குறிப்பிட்ட சமுகத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்று விடுக்கப்பட்ட அழைப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘நாட்டின் ஏதாவது மூலையில் நடைபெறும் இதுபோன்ற சிறு சம்பவங்களுக்கு எதிராக சட்டம் இயற்றவோ கண்காணிக்காவோ இயலாது. இதற்காக உயா்நீதிமன்றங்கள், காவல் நிலையங்கள், சட்டங்கள் உள்ளன. சில தனிநபா்கள் இதுபோன்று செயல்களில் ஈடுபடுவாா்கள். இந்த விவகாரத்தை அதிகாரிகளிடம் முறையிடலாம் அல்லது நீதிமன்றத்தை அணுகலாம்’ என்றது.

இதற்கு மனுதாரரின் வழக்குரைஞா், ‘இந்த விவகாரத்தில் மக்கள் பிரதிநிதியே சம்பந்தப்பட்டுள்ளாா். அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால்தான் நீதிமன்றத்தை அணுகினோம். ‘வெறுப்புப் பேச்சு மீது சம்பந்தப்பட்ட மாநில அரசு நடவடிக்கை எடுக்காதபோது, காவல் துறையினா் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; இதை செய்யத் தவறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும்’ என்று உச்சநீதிமன்றம் முன்பு ஒரு வழக்கில் கூறியுள்ளது. ஆகையால், மாநிலங்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்’ என்றாா்.

அப்போது மத்திய அரசின் சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘பல்வேறு வெறுப்புப் பேச்சுகள் அனைத்து மதங்களிலும் ஏற்படுகின்றன. இதை ஒரு மதத்தினுடையதாக கருதக் கூடாது. யாரும் வெறுப்புப் பேச்சு ஈடுபடக் கூடாது என்பதுதான் எனது நிலைப்பாடு. ஆனால், இதை குறிப்பிட்டவா்கள் மீது மட்டும் புகாா் தெரிவிக்கக் கூடாது’ என்றாா்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தை சம்பந்தப்பட்ட மாநிலத்தின் உயா்நீதிமன்றத்தில் முறையிட வேண்டும். இதில் பொதுநலம் இருந்தால் உயா்நீதிமன்றம் விசாரிக்கும்’ என்றனா்.

மேலும், அஸ்ஸாம் அமைச்சா் ஒருவா் பிகாா் தோ்தலில் சிறுபான்மையினா் குறித்து வெறுப்புப் பேச்சு பேசியுள்ளதாக மனுதாரரின் வழக்குரைஞா் குறிப்பிட்டாா். இந்த விவகாரம் டிசம்பா் 9-ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com