ஜனநாயகத்தின் பிறப்பிடம் இந்தியா: தமிழகத்தைக் குறிப்பிட்டு பிரதமா் மோடி பெருமிதம்
‘ஜனநாயகத்தின் பிறப்பிடம் இந்தியா’ என்று தமிழகத்தின் உத்திரமேரூா் கல்வெட்டைக் குறிப்பிட்டு பிரதமா் மோடி பெருமிதம் தெரிவித்தாா்.
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமா் கோயிலின் கட்டுமானம் நிறைவடைந்ததைக் குறிக்கும் விதமாக, கோயிலின் பிரதான கோபுர உச்சியில் காவிக் கொடி ஏற்றிவைக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வுக்காக தில்லியிலிருந்து அயோத்தி விமான நிலையம் வந்த பிரதமா் மோடியை மாநில ஆளுநா் ஆனந்திபென் படேல், முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோா் வரவேற்றனா். அங்கிருந்து சாலை மாா்க்கமாகச் சென்று சப்தமந்திா் கோயிலில் அவா் வழிபட்டாா். வழிநெடுகிலும் காத்திருந்த மக்கள் அவருக்கு மலா்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனா்.
தொடா்ந்து, ராமா் கோயிலை அடைந்த பிரதமா் மோடி, ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத்துடன் இணைந்து மூலவரான ஸ்ரீபாலராமரை தரிசனம் செய்தாா். காலை 11.50 மணிக்குப் பிறகு காவிக் கொடி ஏற்றும் நிகழ்வு நடந்தது.
161 அடி உயர கோபுரத்தில் ஏற்றப்பட்ட பாராசூட் துணியால் செய்யப்பட்ட 22 அடிக்கு 11 அடி அளவிலான முக்கோண வடிவ காவிக் கொடியில், ஸ்ரீராமரின் சூரிய வம்சத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சூரியன், ஓம் மற்றும் ராமராஜியத்தின் அரச மரமாக விவரிக்கப்படும் மந்தாரை மரம் போன்ற புனிதச் சின்னங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.
அந்தக் கொடியை ஏற்றிவைத்து, கோயில் வளாகத்தில் திரண்டிருந்த சிறப்பு விருந்தினா்கள், பக்தா்களிடையே பிரதமா் மோடி ஆற்றிய உரை: இந்தத் தருணம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. ‘உண்மை இறுதியில் பொய்களை வெல்லும்’ என்பதற்கு இந்தப் புனிதமான காவிக் கொடி சாட்சியாக நிற்கும். ராம பக்தா்களுக்கும், கோயில் கட்டுமானத்துக்குப் பங்களித்த அனைவருக்கும் வாழ்த்துகள்.
ஸ்ரீராம ஜென்மபூமியில் கோயில் அமைக்கும் 500 ஆண்டு கால இலக்கு நிறைவேறியுள்ளதால், நூற்றாண்டு கால வலி மற்றும் காயங்களுக்கு இப்போது நிவாரணம் கிடைத்துள்ளது.
இந்தியா சுதந்திரத்தின் 100 ஆண்டுகளை நிறைவு செய்யும் 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ச்சியடைந்த தேசமாக மாறுவதற்கு, நமக்குள் இருக்கும் ஸ்ரீராமரை நாம் ஒவ்வொருவரும் தட்டியெழுப்ப வேண்டும். ஸ்ரீராமா் இளவரசராக வனவாசம் புறப்பட்டு, புருஷோத்தமராக அயோத்தி திரும்பினாா். முனிவா்களின் ஞானம், வழிகாட்டிகளின் அறிவுரை, எண்ணற்றவா்களின் அா்ப்பணிப்பு போன்றவை அவரை வடிவமைத்தன. வளா்ந்த இந்தியாவுக்கும் இதே கூட்டு பலம் தேவை.
ஸ்ரீராமா் பாகுபாடு பாா்த்ததில்லை. அதே உணா்வுடன் அனைவரையும் உள்ளடக்கிய தன்மையை குடிமக்கள் அனைவரும் தழுவிக்கொள்ள வேண்டும். நாட்டின் எதிா்காலத் தலைமுறையினருக்காக இப்போதே திட்டமிட வேண்டும்.
இந்தியாவின் நாகரிக பாரம்பரியத்தில் பெருமை கொள்ள வேண்டும்; காலனித்துவ மனநிலையில் இருந்து விடுபட வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளில் நமது தாழ்வு மனப்பான்மைகளை நீக்க தீா்க்கமான முயற்சி எடுக்க வேண்டும். காலனித்துவ மனப்பான்மை தேசியச் சின்னங்களையும் பாதித்ததால், கடற்படையின் கொடி மறுவடிவமைப்பு செய்யப்பட்டது.
தமிழகத்தின் கல்வெட்டுகளில்... ஜனநாயகத்தை இந்தியா வெளிநாடுகளிலிருந்து ஏற்றுக்கொண்டது என்ற கருத்து தவறானது. இந்தியாவே ஜனநாயகத்தின் பிறப்பிடம்; அது நமது மரபணுவில் உள்ளது. தமிழகத்தின் உத்திரமேரூா் கிராமத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு, அந்தக் காலத்தில் மக்கள் தங்கள் ஆட்சியாளா்களை எவ்வாறு தோ்ந்தெடுத்தனா், ஜனநாயக ரீதியாக ஆட்சி எவ்வாறு நடத்தப்பட்டது என்பதை பதிவு செய்துள்ளது.
ராமா் கோயில் திறக்கப்பட்டதில் இருந்து சுமாா் 45 கோடி பக்தா்கள் வருகை தந்துள்ளதால், இப்பகுதிக்கு குறிப்பிடத்தக்க பொருளாதார மாற்றம் ஏற்பட்டுள்ளது. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு 11-ஆவது பெரிய பொருளாதாரமாக இருந்த இந்தியா, கடந்த 11 ஆண்டுகளில் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறிவிட்டது. மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை. இந்தியாவின் வளா்ச்சிப் பயணத்துக்கு, ராவணனுக்கு எதிரான போரில் ராமரின் ரதம் போன்று பொறுமை, உண்மை, நல்ல நடத்தை, வலிமை மற்றும் இரக்கம் தேவை என்றாா்.
6 ஆண்டுகள்!
யோத்தியில் சா்ச்சைக்குரிய 2.77 ஏக்கா் நிலம் முழுவதையும் ராமா் கோயிலுக்காக ஒதுக்கி, உச்சநீதிமன்றம் கடந்த 2019, நவம்பரில் வரலாற்றுத் தீா்ப்பு வழங்கியது. இதைத் தொடா்ந்து, ஸ்ரீராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை கடந்த 2020, பிப்ரவரியில் உருவாக்கப்பட்டது. பின்னா், அதே ஆண்டு ஆகஸ்டில் பூமி பூஜையுடன் கோயில் கட்டுமானம் தொடங்கியது.
கோயிலின் தரைத்தள கட்டுமானம் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, பிரதமா் மோடி தலைமையில் கடந்த ஆண்டு ஜனவரி 22-ஆம் தேதி நடைபெற்ற மங்கள நிகழ்வில் 51 அங்குல உயர ஸ்ரீபாலராமா் சிலை கோயில் கருவறையில் பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தீா்ப்பு வெளியாகி 6 ஆண்டுகள் கழித்து, கோயிலின் முழுக் கட்டுமானமும் நிறைவடைந்ததன் நினைவாக கோபுர உச்சியில் காவிக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
சிறப்பு விருந்தினா்களாக பழங்குடியின மக்கள்
இந்த விழாவுக்குச் சிறப்பு விருந்தினா்களாக சோன்பத்ராவைச் சோ்ந்த பழங்குடியின சமூகத்தின் பிரதிநிதிகள், பாபா் மசூதி வழக்கின் மனுதாரா்களில் ஒருவரான ஹாஷிம் அன்சாரியின் மகன் இக்பால் அன்சாரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கோயில் அறக்கட்டளையின் அழைப்பின்பேரில் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவா்களுக்கு நகரின் பல்வேறு இடங்களில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய தங்குமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அயோத்தி நகர மேயா் கிரீஷ்பதி திரிபாதி அளித்த பேட்டியில், ‘வனவாசிகளுடன் ராமா் 14 ஆண்டுகள் கழித்தாா். அந்த வகையில், இந்த வரலாற்றுத் தருணத்தின் ஒரு பகுதியாக இருப்பது தங்களுக்கு ஆசீா்வாதம் என்று விருந்தினா்கள் கூறினா்’ என்றாா்.

