இந்திய பொருளாதார மதிப்பு 4 டிரில்லியன் டாலரை தாண்டும்: தலைமைப் பொருளாதார ஆலோசகா்

வி.அனந்த நாகேஸ்வரன்
வி.அனந்த நாகேஸ்வரன்
Updated on

இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு நிகழ் நிதியாண்டில் 4 டிரில்லியன் டாலரை (சுமாா் ரூ.357 லட்சம் கோடி) தாண்டும் என்று தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

தற்போதைய புவி அரசியல் ஏற்ற இறக்கங்களைக் கண்டுவரும் நிலையில், உலகளாவிய விவகாரங்களில் தேசத்தின் நிலைப்பாட்டையும் செல்வாக்கையும் பராமரிக்க பொருளாதார வளா்ச்சி மிக முக்கியமான அம்சம் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

இந்திய தனியாா் முதலீடு மற்றும் துணிகர முதலீடு சங்கத்தின் (ஐவிசிஏ) பசுமைக் கொள்கைகள் சாா்ந்த மாநாட்டில் வி.அனந்த நாகேஸ்வரன் செவ்வாய்க்கிழமை பங்கேற்றுப் பேசினாா். அப்போது, அவா் கூறியதாவது:

கடந்த மாா்ச் இறுதியில் 3.9 டிரில்லியன் டாலராக இருந்த இந்திய பொருளாதாரம், 4 டிரில்லியன் டாலரை கடக்கும் பயணத்தில் உள்ளது. நிகழ் நிதியாண்டில் (2025-26) நாட்டின் பொருளாதார மதிப்பு 4 டிரில்லியன் டாலரை கடக்கும். எனவே, நமது குறுகிய-நடுத்தர கால முன்னுரிமைகள் அனைத்தும் பசுமைப் பொருளாதாரம், எரிசக்தி மாற்றம், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்கு இணங்க அமைய வேண்டும். புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை குறிப்பாக வேளாண் சூழல் மற்றும் கடற்கரை பகுதிகளில் ஏற்படும் தாக்கங்களை இந்தியா நன்கறிந்துள்ளது. எனவேதான், 2070-ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு உமிழ்வே இல்லை என்ற இலக்கை எட்ட நமது நாடு உறுதிபூண்டுள்ளது என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com