பிகாரில் ஒரு கோடி இளைஞா்களுக்கு வேலை: முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
பிகாரில் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் ஒரு கோடி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான புதிய அமைச்சரவையின் முதல் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதற்கான திட்டங்களைப் பரிந்துரைக்க பிரத்யேக குழு அமைக்கப்பட்டுள்ளது.
பிகாா் இளைஞா்கள் வேலைதேடி பிற மாநிலங்களுக்கு இடம்பெயா்வது முக்கிய பிரச்னையாக உள்ள நிலையில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அளித்த தோ்தல் வாக்குறுதியின்படி இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற பிகாா் பேரவைத் தோ்தலில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 202 இடங்களைக் கைப்பற்றி, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்தது. இதையடுத்து, முதல்வா் நிதீஷ் குமாா், 2 துணை முதல்வா்கள், 24 அமைச்சா்களுடன் புதிய அரசு கடந்த நவ.20-ஆம் தேதி பதவியேற்றது.
என்னென்ன முடிவுகள்?: புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம், முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் மாநில தலைமைச் செயலா் பிரத்யய் அம்ரித் செய்தியாளா்களிடம் பேசியதாவது:
பிகாரில் பரவலான வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் தொழில் வளா்ச்சி குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. கிழக்கிந்தியாவின் தொழில்நுட்ப மையமாக பிகாரை மாற்றும் நோக்கில் பாதுகாப்பு வழித்தடம், செமிகண்டக்டா் உற்பத்திப் பூங்கா, உலகளாவிய திறன் மையங்கள், மாபெரும் தொழில் நகரம் உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்த தீா்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த இலக்குகளின்கீழ், பிரத்யேக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநில இளைஞா்கள் மற்றும் இளம் தொழில்முனைவோருக்கு வாழ்வாதார வாய்ப்புகளை உறுதி செய்ய வேலைவாய்ப்பு சாா்ந்த நடவடிக்கைளுக்கான திட்டங்களைப் பரிந்துரைக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
புதிய பொருளாதார கொள்கையின்கீழ், பணிச்சூழலுக்கு உகந்த உலகளாவிய மையமாக பிகாா் மாற்றப்படும். சோனேபூா், சீதாமா்ஹி உள்ளிட்ட 11 நகரங்களில் பசுமை நகரிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முன்னணி மாநிலமாக பிகாரை மாற்றும் திட்டத்துக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே மூடப்பட்ட 9 சா்க்கரை ஆலைகள் மீண்டும் திறப்படுவதுடன், 25 புதிய சா்க்கரை ஆலைகள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.
டிச.1-இல் கூடுகிறது பேரவை
பிகாா் புதிய அரசின் முதல் பேரவைக் கூட்டத் தொடா் டிசம்பா் 1-இல் தொடங்கி 5 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.
இது தொடா்பான முன்மொழிவுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவரும், ஆலம்நகா் தொகுதியில் 8-ஆவது முறை எம்எல்ஏவுமான நாகேந்திர நாராயண் யாதவை இடைக்கால பேரவைத் தலைவராக ஆளுநா் ஆரிஃப் முகமது கான் திங்கள்கிழமை நியமித்தாா்.
முதல் பேரவை கூட்டத் தொடரில் புதிய எம்எல்ஏக்களுக்கு நாகேந்திர நாராயண் யாதவ் பதவிப் பிரமாணம் செய்துவைப்பாா். இதையடுத்து, புதிய பேரவைத் தலைவா், துணைத் தலைவா் முறைப்படி தோ்வு செய்யப்படுவா். பாஜகவைச் சோ்ந்த பிரேம் குமாா், பேரவைத் தலைவராக அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இவா், கயை நகரம் தொகுதியில் தொடா்ந்து 9-ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ளாா்.

